Tuesday, 4 July 2017

அரசியல் தூய்மை இல்லாத அன்புமணி

அரசியல் தூய்மை இல்லாத அன்புமணி…

சினிமாவில் நடிப்பவர்கள், வசனம் எழுதுபவர்கள் நாட்டை ஆள வேண்டுமா? ஒரு மருத்துவருக்கு நாட்டை ஆளத் தெரியாதா? இப்படித்தான் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வருகிறார். நாட்டை ஆள்வதற்கு இவருக்குத் தகுதியிருக்கிறதா என்பதை தனது பிளாஷ்பேக் அனுபவங்களிலிருந்து அன்புமணி சுயசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் மே 2004-லிருந்து மன்மோகன் அமைச்சரவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஐந்ள் பதவி வகித்தார். அவருக்கு முன்பாக சுகாதாரத்துறை பதவியை வகித்த 13 அமைச்சர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பழமையும் சிறப்புமிக்க சென்னை மருத்துவக்கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்ற மருத்துவர் ஒருவர் மத்திய அமைச்சரானது இவர் ஒருவரே. ஆனால் பதவியேற்ற நான்காண்டுகளில் அவர்கள் எல்லோரையும் இவர் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
சுதந்திர இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழைக் குழந்தைகளை கொள்ளை நோய்களிடமிருந்து பாதுகாத்த மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுத்துறை தடுப்பூசி நிறுவனங்களான கசௌலி மத்திய ஆராய்ச்சிக்கழகம் ( 1905 ), குன்னூர் லூயி பாயிஸ்டியர் இன்ஸ்டிட்யூட் கழகம் ( 1907 ) கிண்டி பிசிஜி லேபரேட்டரி ( 1948 ) ஆகியவற்றின் தடுப்பூசி மருந்து உற்பத்தியை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் 15.1.2008 அன்று முதல் நிறுத்தி பூட்டு போட்டார்.
இது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பினை உருவாக்கியது. பெரும்பாலான பத்திரிகைகள் இதைக் கண்டித்தன. இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் மீண்டும் இந்நிறுவனங்கள் திறக்கப்படவேண்டும் எனப் போராடின. ஆனால் இந்த தடுப்பூசி நிறுவனங் கள் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தும் உற்பத்திவிதிமுறைகளுக்கேற்ப இல்லை என்பதால் இவ்வாறு மூட வேண்டியிருந்தது என அன்புமணி ராமதாஸ் சிறிதும் கூச்சமின்றி விளக்கம் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாக மாறியிருந்த நிலையில், அது வழிகாட்டும் அமைப்பே தவிர கட்டளையிடும் அமைப்பு அல்ல என மருந்தியல் அறிஞர்கள் குறிப்பிட்டுக் கூறினார்கள்.
2004ஆம் ஆண்டிலேயே இதுபற்றி தெரிந்திருந்தும் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இந்த தடுப்பூசி நிறுவனங்களை மேம்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அவரது இந்தச் செயல் பல சந்தேகங்களை கேள்விகளை உருவாக்கியிருந்தது. இதையெல்லாம் அன்புமணி ராமதாஸ் வசதியாக மறந்திருக்கக்கூடும். நாடு மறக்கவில்லை.

கொள்ளை லாபத் தொழில்

மிகப்பெரும் கொள்ளை லாபம் கொழிக்கும் சர்வதேசத் தடுப்பூசிச் சந்தையில், தொழில் வளர்ச்சியடைந்த பணக்கார நாடுகள் விலை உயர்ந்த புதிய தடுப்பூசிகளை 1990களின் இறுதியில் அறிமுகம் செய்தன. கொள்ளை லாபம்தான் இதன் பிரதான நோக்கமாக இருந்தது.
இதனால் 1998-2001 ஆண்டுகளில் மலிவு விலையில் தடுப்பூசி தயாரித்து வந்த உலகின் 14 நிறுவனங்களில் 10 நிறுவனங்கள் முற்றிலும் தயாரிப்பை நிறுத்திவிட்டன. இதனால் அடிப்படையான தடுப்பூசிகளின் தட்டுப்பாடு உலகெங்கும் ஏற்பட்டது. அப்போது இந்தியாவில் டிப்தீரியா, இசிவுநோய், போலியோ, காசநோய், வெறிநாய்க்கடி போன்ற நோய்களுக்கான ஆறு அடிப்படை தடுப்பூசிகளை குன்னூர் பாஸ்டியர் நிறுவனம், கிண்டி பிசிஜி நிறுவனம், கசொளலி இந்திய ஆராய்ச்சிக்கழகம் உள்ளிட்ட இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்து நாட்டின் நோய் தடுப்புத் திட்டத்திற்கு மலிவான விலையில் அளித்து வந்தன. இவைகளை காங்கிரஸ் பாஜக ஆட்சிகள் தேவைக்கேற்ப நவீனமாக்கவில்லை. போலியோ தடுப்பூசி உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்குரிய நிறுவன விரிவாக்கமும் செய்யவில்லை.
இந்நிலையில் தான் 2004 மே மாதம் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக பதவியேற்றார்.
உலக தடுப்பூசிச் சந்தையில் 33 சதவீதம் இந்தியச் சந்தையாகும். தடுப்பூசி பகாசுர நிறுவனங்கள் இந்தியாவை மிகப்பெரும் சந்தையாகவே பார்த்தன. 2004லிருந்து 2008 ஜூலை வரை நிறையவே வாய்ப்பும் அவகாசமும் இருந்தும் இந்நிறுவனங்களை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அதாவது தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இந்திய தடுப்பூசிக் கொள்கைகளை வடிவமைப்பதில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குறியாக இருந்தாரா என்ற ஊகங்களை இது உருவாக்கியது. இதுவே இந்திய தொற்றுநோய் தடுப்பியக்கத்திற்கு மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்தி தனியார், பன்னாட்டு நிறுவனங்கள் லாபம் குவிக்கவும் காரணமாக இருந்தது.

சர்வதேச தடுப்பூசி கொள்ளைக் கூட்டணி

2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்கூட்டணியில் யுனிசெப், உலகசுகாதார அமைப்பு, உலக வங்கி, பில்கேட்ஸ் பவுண்டேசன் (மைக்ரோசாப்ட்) ஆகியவை நிரந்தர உறுப்பினர்கள். இந்தியா உள்பட 34 நாடுகள் இதன் தடுப்பூசி வர்த்தகத்திற்கு நிதியளிக்கும் பங்காளிகள். இதில் பில்கேட்ஸ் பவுண்டேஷன் உள்பட அமெரிக்க மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் மற்றும் அதன் அமைப்புகளின் மொத்த நிதி பங்களிப்பு மட்டும் சுமார் 70 சதவீத மாகும். இந்நாடுகளின் நிறுவனங்கள் தயாரிக்கும் விலையுயர்ந்த ஐந்திற (பெண்டாவேலண்ட் தடுப்பூசிகள்) தடுப்பூசிகளின் உற்பத்தி சந்தையில்லாமல் வீணாகக் குவிந்தன. மறுபுறம் ஏழை மற்றும் வளரும் நாடுகளின் தொற்று நோயியல் இயக்கத்திற்கு தேவையான மலிவான தடுப்பூசி நிறுவனங்கள் மூடப்பட்டு (நம்மையும் சேர்த்துத்தான்) செயற்கையான பற்றாக்குறை இவர்களால் உருவாக்கப்பட்டிருந்தது.
உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளின் நலனையே பிரதானமாக கொண்டிருந்ததால் கேட்ஸ் பவுண்டேஷன் ஆளுகையின்கீழ் இந்த கூட்டணியாவது, விலைஉயர்ந்த தடுப்பூசிகளின் விற்பனைக்கான ஏஜெண்டாகவே மாறியது. ஏழை நாடுகளின் சுகாதார இயக்கங்களில் தேவையில்லாத தடுப்பூசிகளை திணிப்பதும் அந்நாட்டின் தொற்றுநோய் தடுப்பியக்கத்தின் எதிர்காலத்தை தனக்கு சாதகமாக மாற்றுவதையும் “சேவை” என்ற பெயரில் இக்கூட்டணி செய்தது.
2011-2015 காலகட்டத்தில் மட்டும் 73 நாடுகளில் 200 வகை விலையுயர்ந்த புதிய தடுப்பூசிகளுக்கு இக்கூட்டணி ஆதரவளித்தது. 8.12.2008 இல் இக்கூட்டணியின் தில்லி அரங்கில் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் இந்திய தொற்று எதிர்ப்பியக்கத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் சேர்க்கப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்தவகை தடுப்பூசிகளுக்கு எதிராக கடுமையான வாதங்கள், எதிர்ப்புகள் உருவாகின.
புகழ்பெற்ற சமூக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் யென்னுப்பு மாதவி, ஜேக்கப் எம். புலியேல், என்.ரகுராமன் போன்றோர் பில்கேட்ஸ் கூட்டணியை விமர்சித்தும் எச்ஐபி மற்றும் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசிகளை நமது தடுப்பியக்கத்தில் சேர்க்க வேண்டிய தேவை எழுவில்லை ( மருத்துவ ஆராய்ச்சிக் கழக சஞ்சிகை அக்டோபர் 2010 பக்கம் 456) என ஆதாரங்களுடன் வாதிட்டனர்.
இந்திய தொற்றுநோயியல் திட்டத்தை தன் தேவைகொப்ப மாற்ற நினைத்த இந்த பில் கேட்ஸ் கூட்டணியைதான் ரத்தினக்கம்பளம் விரித்து அன்புமணி வரவேற்றார். இந்த கூட்டணியில் இருந்த உலக சுகாதார அமைப்பு உருவாக்கிய நெருக்கடியை அன்புமணி ராமதாஸ் நமது நிறுவனங்களை மூடுவதற்கு வசதியாக்கிக்கொண்டார்.

பதில் சொல்லத் தயாரா அன்புமணி அவர்களே!

அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஐந்தாண்டுகளில் ஏராளமான கேள்விகள், சந்தேகங்கள் எழுந்தன. 2007 டிசம்பர் இறுதியில் (அரசு நிறுவனங்களை மூடுவதற்கு சற்று முன்பு) அவரது நெருங்கிய நண்பரின் க்ரீன் சிக்னல் பையோ பார்மா எனப்படும் சென்னை நிறுவனத்திற்கு தடுப்பூசி தயாரிப்பிற்காக ரூ.14 கோடி வங்கியில் பெற்றுத்தந்ததாகவும், மதுரை தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு கருவிகள் வாங்குவதற்கு முறைகேடாக சான்றிதழ் அளித்ததாகவும், தட்டம்மை தடுப்பூசிக்கான மூல மருந்தியல் விதை கொள்முதலில் மிகப்பெரும் ஊழல் நடைபெற்றதாகவும் “தி பயோனியர்” தொடர்ந்து எழுதியது.
15.1.2008 அன்று இந்திய நிறுவனங்களின் தடுப்பூசி தயாரிப்பை நிறுத்திய அன்புமணி அவர் பதவி விலகும்வரை நிறுவன மேம்பாட்டிற்கும் மீண்டும் திறப்பதற்கும் உருப்படியான நடவடிக்கை எடுக்கவில்லை.
உத்தரப்பிரதேசம் தனியார் கல்லூரியான ரோகி சந்த் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை புதுப்பித்ததிலும் அடிப்படை வசதியில்லாத தனியார் இந்தூர் மருத்துவக்கல்லூரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாகவும் கூறப்பட்ட வழக்கு தில்லி சிஐபி நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்குகளில் குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி, போலி ஆவணங்களை மோசடியாக பயன்படுத்துதல் இவைகளுடன் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளில் அன்புமணிக்கு எதிராக குற்றச்சாட்டிற்குரிய முதல் நோக்கு உள்ளதாக நீதிமன்றம் கூறியது.
ஆனால் அன்புமணி “தி இந்துவிற்கு” அளித்த பேட்டியில் (7.10.2015) முதல் தகவல் அறிக்கையிலோ ஆரம்ப விசாரணைகளிலோ தனது பெயர் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் பின்னர் சேர்க்கப்பட்டது அரசியல் நோக்கம் உள்ளது எனவும் கூறினார்.
குற்றவியல் வழக்குகளின் நடைமுறையில், வழக்கின் புலன் விசாரணையின்போது முதல் தகவல் அறிக்கையில் இல்லாத ஒருவர் குற்றவாளி எனத் தெரிந்தால் அவரை குற்றப்பத்திரிகையில் இணைப்ப தென்பது வழக்கமான ஒன்று. நீதிமன்ற சாட்சிய விசாரணையின்போதும்கூட புதிதாக ஒருவர் குற்றவாளி என நீதிமன்றத்திற்கு தெரிந்தால் அவர் மீதும் குற்றச்சாட்டு வனையப்பட்டு நடத்தப்பட்ட லட்சக்கணக்கான வழக்குகளை இந்திய நீதிமன்றங்கள் சந்தித்துள்ளன.
இவை மாண்புமிகு அன்புமணி ராமதாசுக்கு தெரியாததல்ல. மக்களுக்கு தெரியாது என அவர் நினைப்பதுதான் தவறு. டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களே, நீங்கள் மூடிய தடுப்பூசி நிறுவனங்களை திறக்க வேண்டும் என இடதுசாரிகள், தொழிலாளர்கள் போராடினார்கள்.நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பினார்கள். இப்போராட்டம் வெற்றி பெற்றது. இப்போது இந்நிறுவனங்கள் இயங்குகின்றன. 2004 ஆம் ஆண்டிலேயே நம் தாயகத்து தடுப்பூசி நிறுவனங்களை தொழில்நுட்ப அபிவிருத்தி செய்யவேண்டும் எனத் தெரிந்தும் மருத்துவரான உங்களுக்கு அதிகாரம் இருந்தும் அதைச் செய்யவில்லையே ஏன்?
இதற்கான விவாதத்தை நாம் மீண்டும் துவக்கி வைக்கலாம். இந்திய நாடாளுமன்ற நடைமுறையில் நீங்கள் செய்யும் தொழில் முக்கியமல்ல. முன்னிறுத்தும் கொள்கைகள்தான் முக்கியம். உங்கள் தோற்றம் முக்கியமல்ல. அரசியலில் தூய்மைதான் முக்கியம்.
இந்திய தடுப்பூசி நிறுவனங்களை மூடிய வரலாற்றுத் துரோகத்திற்கான விடையை வரும் தேர்தலில் மக்கள் அளிப்பார்கள்.
–  சுஜித் அச்சுக் குட்டன்
free wordpress themes

No comments:

Post a Comment