Monday 27 August 2018

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு பகுதி 1

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

பிறந்த தேதி: 01-03-1953 அன்று
பெற்றோர்: தலைவர் கலைஞர் தயாளு அம்மாள் ஆகியோர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
உடன் பிறந்தோர்: மு. க. அழகிரி (அண்ணன்), செல்வி (அக்காள்), மு.க. தமிழரசு (தம்பி)
கல்வி: சென்னை, மெட்ராஸ் கிறுஸ்டியன் கல்லூரிப் பள்ளியில் பள்ளிக்கல்வி
சென்னை, மாநிலக்கல்லூரியில் புதுமுக வகுப்பு மற்றும் இளங்கலை கலையியல் பட்டப்படிப்பு
திருமண நாள்: 25-08-1975
துணைவியார்: திருமதி. துர்கா
குழந்தைகள்: உதயநிதி (மகன்), செந்தாமரை (மகள்)
அரசியல் பணி: சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (1989-1991, 1996-2001, 2001-2006, 2006-இன்றுவரை)
@ 1996 முதல் 2002 வரை சென்னை மாகாண மேயர்.
@ 2006 முதல் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்.
@ தி.மு.க வின் துணைப் பொதுச்செயலாளர்
@ தி.மு.க இளைஞர் அணி செயலாளர்.
பயணம் செய்த நாடுகள்: சிங்கபூர், மலேசியா, ஹாங்காங், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான்…
எழுதியுள்ல நூல்: பயணச்சிறகுகள்
தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தியாக வரலாறு

1968
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் 15 வயது மாணவராக இருக்கும் போதே கோபாலபுரம் பகுதியில் வசிக்கும் தன் வயதை ஒத்த இளைஞர்களை இணைத்து 1968ஆம் ஆண்டு இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பினை உருவாக்கினார். தலைவர் வீட்டுப்பிள்ளை என்று மட்டும் இருந்துவிடாமல் இயக்க வளர்ச்சிக்காக இளைஞர்களைக் கொண்ட இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பாக நடத்தி வந்தார். அந்தச் செயல்பாட்டின் தொடக்கமே இளைஞர் அணி வரலாற்றின் தொடக்கம்.
30.09.1968 அன்று அண்ணா பிறந்த நாள் விழாவை தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே முன்னின்று கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடத்தினார். அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அப்போதைய பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மு.கருணாநிதி அவர்களுடன், அமைச்சர்கள் ஏ.கோவிந்தசாமி, முத்துசாமி மற்றும் சிலம்புச் செல்வர் ம.பொ.சி., ப.உ.சண்முகம், இரா.சனார்த்தனம் முதலானோர் பங்கேற்றனர். மு.க.தமிழரசு அவர்கள் வருகை தந்து சிறப்பு விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். முரசொலி மாறன் அவர்களின் மகன் கலாநிதி மாறன் ஏழை எளியவர்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கினார்.
முதல் தேர்தல் பணி
1968ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் – சென்னை 99ஆம் வட்டத்தில் டி.கே.கபாலி அவர்களும், 109ஆம் வட்டத்தில் இரா.சடகோபன் ஆகிய கழக வேட்பாளர்களை ஆதரித்து கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. பிரச்சாரப் பணியாற்றியது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முதல் தேர்தல் பணி இதுவாகும்.
முதல் பொதுக்கூட்டம்
தளபதி மு.க.ஸ்டாலின் பங்கேற்ற முதல் தி.மு.க. பொதுக்கூட்டம் – 30.01.1969 அன்று சென்னை கோடம்பாக்கம் – மாம்பலம் நெடுஞ்சாலையில் நடைபெற்றதாகும். அக்கூட்டத்தில் நடிகமணி டி.வி.நாராயணசாமி, நீலநாராயணன், சா.கணேசன், நடிகர் ஓ.ஏ.கே. தேவர், செல்வரத்தினம், பாண்டியன் முதலானோரும் பங்கேற்றுப் பேசினர்.
1969
01.10.1969 பேரறிஞர் அண்ணாவின் மணிவிழா, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. இளைஞர் தி.மு.க.வினர் அண்ணா துயிலுமிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அன்று மாலை வடபழனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தளபதி மு.க.ஸ்டாலின் வரவேற்புரை வழங்கினார். அக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர் அவர்களுடன் ஆந்திர முதல்வர் பிரம்மானந்த ரெட்டி, புதுவை முதல்வர் பரூக் அப்துல்லா ஆகிய மூன்று மாநில முதல்வர்களும், புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., முரசொலி மாறன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
1970
13.01.1970ஆம் நாள் தி.மு.கழக முன்னணியினருக்கும், இளைஞர் தி.மு.க. அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து அனுப்பி வைத்தார்.
சென்னை 115ஆவது வட்டத்தில் எம்.எஸ்.மணி அவர்கள் தலைமையில் 22.04.1970 அன்று நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன், அமைச்சர் என்.வி.நடராசன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சென்னை 119ஆம் வட்டம் – கோட்டூர் எல்லையம்மன் கோயில் அருகில் என்.எஸ்.கே. நினைவு மன்றத்தின் சார்பில் – சா.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டத்தில் நாஞ்சில் மனோகரன் எம்.பி., கோவை செழியன், சைதை சம்பந்தம் முதலானோருடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
நாடகங்களில்…
நூறு பொதுக்கூட்டங்களுக்கு ஒரு நாடகம் ஈடானது என்பார்கள். அதனால்தான் பேரறிஞர் அண்ணா சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் முதலான நாடகங்களை உருவாக்கி அவற்றில் நடிக்கவும் செய்தார். தலைவர் கலைஞர் காகிதப்பூ முதலான நாடங்களில் நடித்தார். அவர்களின் வழியிலேயே கழகக் கொள்கைப் பிரசாரத்திற்காக மு.க.ஸ்டாலின் அவர்களும் பல்வேறு நாடகங்களில் நடித்தார். அவற்றில் முதல் நாடகம் முரசே முழங்கு. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் நடைபெற்ற அந்நாடகத்திற்கு முதல்வர் கலைஞர் அவர்கள் முன்னிலை வகித்தார். புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார். இந்நாடகம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. 40ஆம் முறையாகவும், நிறைவாகவும் அதே அரங்கத்தில் நடைபெற்ற போது புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் தூய்மையில் மிகுந்த அக்கறை கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை எலியட்ஸ் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணியினை நீலநாராயணன் அவர்கள் தலைமையில் தனி அதிகாரி பரமசிவம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
1971
25.10.1971 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பட்டிமன்றம் நடத்தப்பட்டது. அண்ணா என்றும் வாழ்வது எதனால்? மனிதாபிமான உணர்வாலா?, மொழிப் பற்றாலா? என்னும் இப்பட்டிமன்றத்திற்கு மனிதாபிமான உணர்வால் என்னும் தலைப்பில் அமைச்சர் அன்பில் தருமலிங்கம், ஔவை நடராசன், துரைமுருகன், ஏ.கே.வில்வம், என்.வி.என்.செல்வம் ஆகியோரும், மொழிப்பற்றால் என்னும் தலைப்பில் அமைச்சர் க.இராசாராம், திருப்பத்தூர் இராமமூர்த்தி, இரகுமான்கான், முரசொலி அடியார், வலம்புரிஜான் ஆகியோரும் வாதப்போர் புரிந்தனர். மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலைஞர், கல்வியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், தமிழக அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கழக முன்னணியினர் பங்கேற்றனர். விழாவைச் சிறப்புற ஏற்பாடு செய்த ஸ்டாலின் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
1972 அண்ணா ஜோதி
1972ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற செங்கற்பட்டு மாவட்ட தி.மு.க. மாநாட்டிற்கு மு.க.ஸ்டாலின், இளைஞர் தி.மு.க.வின் சார்பாகத் தோழர்களை அழைத்துக் கொண்டு தொடர் ஓட்டமாக வந்து அண்ணா ஜோதியை தலைவர் கலைஞர் அவர்களிடம் வழங்கினார்.
1973
12.1.1973இல் இளைஞர் தி.மு.க. அலுவலகத்தை கழகத் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்கள் தலைமையில் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் திறந்து வைத்தார். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பல்வேறு கழக மேடைகளில் எழுச்சி உரையாற்றி வந்தார்.
1973இல் ஏப்ரல் மாதத்தில் கொள்கை விளக்க நாடகமான திண்டுக்கல் தீர்ப்பு நாடகத்தில் தளபதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக நடித்தார்.
தேர்தல் ஆணையாளர்
இந்தியாவில் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு தி.மு.கழகத்தில் உள்ள ஜனநாயகப் பண்பான தேர்தல்தான். அடிப்படை உரிமைச் சீட்டுகளை உறுப்பினர்களுக்கு வழங்கி அந்த உறுப்பினர்கள் வாக்களித்து கிளைக் கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். பின் கிளைக் கழக செயலாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் வாக்களித்து நகர, ஒன்றிய கழக நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பர். நகர, ஒன்றிய செயலாளர்களும், மாவட்ட பிரதிநிதிகளும் வாக்களித்து மாவட்டக் கழக நிர்வாகிகளையும், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களையும் தேர்ந்து எடுப்பார்கள். அதன்பின் நகர, ஒன்றிய, மாவட்ட செயலாளர்களும், தலைமைப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் வாக்களித்து தலைமைக் கழக நிர்வாகிகளையும், தணிக்கைக் குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். இந்த தேர்தல்களை கழகம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை முறையாக நடத்தி வருவது தி.மு.கழகத்தின் தனிச்சிறப்பு. 1973இல் புதுக்கோட்டை மாவட்டக் கழகத் தேர்தலை மு.க.ஸ்டாலின் ஆணையாளராகச் சென்று சிறப்புற நடத்தினார். அதுபோன்றே செங்கை மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத் தேர்தலையும் ஆணையாளராக இருந்து நடத்தி வைத்தார்.
1975
20.08.1975 அன்று தளபதி அவர்கள் துர்க்காவதி (எ) சாந்தா அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டார். இத்திருமணம் கழக பொதுச் செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் கழகப் பொருளாளர் பேராசிரியர் க.அன்பழகன் முன்னிலையில் நடைபெற்றது.
இந்திய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது அவர்களுடன் மத்திய அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம், பெருந்தலைவர் காமராசர், மத்திய, மாநில அமைச்சர்கள், அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்தினர்.
தி.மு.கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐந்தாம் மாநில மாநாட்டின் முதல் நாளில் மு.க.ஸ்டாலின் நடித்த வெற்றி நமதே நாடகம் நடைபெற்றது.
நெருக்கடி நிலை
1975ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் நாட்டில் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். அவரை எதிர்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சிறையிலடைத்தார். தமிழ்நாட்டில் பெருந்தலைவர் காமராசரை கைது செய்ய முயற்சி செய்தார். ஆனால் அப்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கலைஞர் இதற்கு ஒத்துழைக்கவில்லை. அத்துடன் கோவையில் நடைபெற்ற தி.மு.க. 5ஆம் மாநில மாநாட்டில் 
(Revoke Emergency – Release the Leaders and Restore Democracy)நெருக்கடி நிலையைத் திரும்பப் பெறுக – கைது செய்யப்பட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்க – ஜனநாயகம் காத்திடுக என்று தீர்மானங்களை நிறைவேற்றியதாலும் – 30.01.1976 அன்று கழக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நாடு முழுவதும் ஏராளமான கழக முன்னோடிகள் கைது செய்யப்பட்டனர். அவ்வகையில் தலைவர் கலைஞர் அவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக அவர் மகன் மு.க.ஸ்டாலினை கைது செய்ய காவல் துறையின் தலைவர் இல்லத்துக்கு விரைந்தனர். அப்போது ஸ்டாலின் ஊரில் இல்லாததால், தலைவர் கலைஞர், ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தகவல் தருகிறேன் – நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தார். மறுநாள் மு.க.ஸ்டாலின் ஊர் திரும்பியதும் தலைவர் கலைஞர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அவர்களும் தலைவர் இல்லம் வந்து மு.க.ஸ்டாலினைக் கைது செய்தனர். திருமணமாகி ஐந்து மாதங்களேயான நிலையில் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு அனுபவித்த கொடுமைகளை சிறைச்சாலை சித்திரவதையால் உயிர்நீத்த கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிறைக் குறிப்புகள் பதிவாக்கியுள்ளன.
சிட்டிபாபுவின் சிறை டைரி
அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். அவன் வந்தது எனக்குத் தெரியாது. தம்பி வந்தது முதல் தடவை, புதியவன் சிறைக்கு!
புரியாத காரணத்தால் அவன் குழம்பி இருப்பான். இரவெல்லாம் கண்விழித்து கிடந்திருக்கிறான். பாவம் புது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. ஆமாம்! அன்று இரவெல்லாம் அவன் உள்ளம் அவனை அப்படித்தான் எண்ணிடச் செய்திருக்கும்.
2.2.1976 காலை கண்விழித்தேன். கதவு திறக்கப்பட்டது. கைகால்கள் கழுவ, காலைக் கடன் தீர்க்க! – கண்டேன் சீதையை என்று கம்பன் காட்டினானே கருத்தை. அதைப்போல காணக் கிடைக்காத என் கண்ணின் கருவிழியைக் கண்டேன்.
உள்ளத்தில் சுமை ஆயினும் உதட்டில் புன்முறுவல். அவன் முகம் பார்த்தவுடன் அணைத்துக் கொண்டேன் அவனைப் பாசத்தால்; என்னோடு வா தம்பி என் அறைக்கு என்றேன்.
அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க கண்கள் விரும்பியது. அவனும் என் கண்களுக்கு தன் முத்துப் பல் வரிசை முறுவலைக் காட்டிக் காட்டி, இதயம் கவர் கள்வனாக மாறிக் கொண்டே இருந்தான். பாலுடன் கலந்த நீர் போல இரு உள்ளங்களும் இணைய ஆரம்பித்தன! சொற்களால் அல்ல பார்வையால்.
பத்து மணிக்கு காலை உணவு. ஆமாம் இருபது தட்டுகள் மட்டுமே ஐம்பது பேருக்கு! ஒருவர் உண்ட பிறகு பிரிதொருவர். அது என்ன எடுத்திடும் பொருளா இல்லையே. விரல்வரைதான் அந்த உறவு; வழித்திடும் கூழ்! சுவைக்குப் புளிகாரம். ஓர் இரவு உணவு அற்ற காரணம் ஒரு சிலரை சுவை பார்க்க உருவாக்கியது.
தம்பி (ஸ்டாலின்) சுவைத்தான். பசியோ என்றுகூட எண்ணினேன். இல்லை பழக்கப்படுத்திக் கொள்ளவே என்றான். இதுதானே இனிமேல் உணவு நமக்கு என்று என்னைக் கேட்டான். இல்லை இது எப்போதும் சிறையில் முதல்நாள் விருந்து, இனிமேல்தான் தெரியும் என்றேன். என் சிறை அனுபவங்களைக் கொண்டு இதனைச் சொல்லி வைத்தேன்.
உடன் அனைவரும் லாக்கப் என்றனர். ஏன் என்றோம். 24 மணி நேர லாக்கப்; நீங்கள் மிசா என்பதே பதில்!
இடையில் அறைகள் அறுவரை விழுங்கின. மூன்றாவது அறை ஆமாம் அதுதான் நானும் வீராசாமியும், வி.எஸ்.ஜி.யும், நீலநாராயணனும், எம் தம்பி (ஸ்டாலின்)யும் அடுத்த அறை!
ஐவர் உள்ளே, பெருக்க துடைப்பம், சிறுநீர் கழிக்க பானை பழையது. தரையெல்லாம் தகர்ந்த சிமெண்ட் காரைகள், பகல் உணவு – இரண்டு மணிக்கு. கீரைத்தண்டு சாம்பார் கட்டிச் சோறுடன். கொஞ்சம் களி, தொட்டுப் பார்த்து வைத்துவிட்டேன். எம்.பி. என்ற முறையில் எதையும் செய்துவிட முடியாது என்பது எனக்கே புரிந்து விட்டது.
இனிமேல் அடிக்கடி கைதியின் காரியத்தை ஆற்றினால்தான் தேவைகள் கிடைக்கும். அதற்கும் வழியில்லாமல் அருகில் யாரும் வராத வகையில் பலத்த காவல் காரணம். மிசா. என்ன மிசாவோ! அவர்களுக்கும் என்ன செய்து, எப்படி நடத்துவது என்பது புரியவில்லை.
கயூம் உருவில் காலன் வந்தான்
மாலை 5 மணி. மீண்டும் உணவு களியுடன் கூடிய தட்டு. யாரோ பயன்படுத்திய தட்டுக்கள்; பயன்படுத்திய சிறுநீர்ப் பானைகள்! யாரிடம் கேட்பது, கேட்டால் யார் பதில் சொல்வது.
இரவு 7.30 மணி. அறைக்குள்ளே இருட்டுத்தான். ஆயினும் வெளிவாசலில் ஓரிரு விளக்குகள். மங்கலான ஒளியில் 8 மணியளவில் சில உருவங்கள் வருவதைக் காண முடிந்தது!
காரணம் நான் இருந்த இடம் வருவோரைப் போவோரைப் பார்க்கும் வகையில் அமைந்திருந்தது. காக்கி உடைகள், வெள்ளை உடைகள், சற்றேறக் குறைய இருபதுக்கும் மேற்பட்டோர்! சிறை அதிகாரிகள் இருவர். கயூம் அழகான பெயர்! அன்பு என்ற சொல்லுக்கு அளித்திட்ட உருதுச் சொல்தான் கயூம்.
ஆமாம் அந்த அன்புதான் அரசியல் கைதிகளை அடித்திட ஆட்களுடன் அங்கே நின்றிருந்தார். அவர் மட்டுமல்ல, அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் உட்பட அவரது கை அசைவில் அத்தனை பேரும் நாங்கள் இருக்கும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்!
எப்படி இருகோடுகள் தனித்தனியே படுக்க வைத்தால் இருக்குமோ அப்படிப்பட்ட அமைப்பில் அவர்கள் நின்றனர்! அவர்களது கையில் இருந்த தடிகளை அவர்கள் நீட்டினால் ஏற்படும் அளவே இரு கோடுகளுக்கு நடுவே உள்ள இடைவெளி!
பட்டாளத்தின் வீரர்களைப் போல அவர்கள் நின்றனர். இதற்குள் காக்கி உடை அணிந்த பள்ளி ஆசிரியர் கம்பீரமாக குரல் எழுப்பினர். அறை பத்து அருகில்! கண்களுக்குத் தெரியாமல் காலன் கவர வருவான் உயிரை என்பார்கள்; கட்டையாகி விழப் போகிறவர்கள். அதே போல் கதவருகே காக்கி உடையில் காவலாளிகள் காலனைப்போல்!
கதவு திறக்கப்படும் ஒலி!
கம்பீரமான குரல் பேசியது!
பெயர் சொல்லி அறைவிட்டு வருதல் வேண்டும். சர்ச் என்ற பெயரால் திறக்கப்பட்ட கதவு பளீர் என்ற சத்தத்துடன் துவங்கியது. ஏதோ சினிமாவில் காணும் காட்சி போல் இருந்தது!
கொலைகாரக் கைதிகளின் கைத்தடிகள் அரசியல்வாதிகளின் உடலைச் சுவைத்துக் கொண்டு இருந்தன! அலறல் அழுகுரல்கள். அய்யோ! அப்போ! அம்மா! – என்னும் அபயக் குரல்கள். ஓடு உள்ளே என்ற உத்திரவு! சர்க்கஸ் புலி ஆட்டுக் குட்டியின் தலையைத் தன் அகண்ட வாயில் வைத்து சுவைக்காமல் காண்போருக்கு வித்தை காட்டுவதுபோல் கணநேர அதிர்ச்சி! ஓடு என்றவுடன் தீ வளையத்தை தாண்டிச் செல்லும் சிங்கம் போல் கூண்டுக்குள் அடங்கியது!
அறை பத்து! அடுத்த அறை ஒன்பது! அப்படியே ஐந்து வரை வந்து கொண்டே இருந்தது! அடுத்து ஓர் அறைதான்! அதற்கு அடுத்து எனது அறைதான். அறையில் உள்ளவர்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கும் காட்சியிலேயே அவர்கள் அடிபட்டது போன்ற உணர்வு! தங்களை அறியாமல் இது என்ன என்ற கேள்வி! அழுவதா சிரிப்பதா என்று இருக்கும் நிலை எனக்கு! காரணம் இதுபோன்ற காட்சிகளை நான் இரண்டு முறை கண்டவன் மட்டும் அல்ல. நானே ஓர் அங்கமாக அகப்பட்டு உள்ளவன்! அதனால் எனக்கு அதிர்ச்சி இல்லை!
ஆனாலும் எனது நண்பர்களைப் பார்த்து ஆடை அணிந்து கொண்டே வெளியே போக வேண்டும். அவன் சொல்வது போல் ஆடையைக் கழற்றிவிட்டுப் போகக் கூடாது என்று சொன்னேன். ஆனாலும் அனைவரும் மழையில் நனைந்த குழந்தைகள் போல் உடல் ஆடிக் கொண்டே இருப்பதைக் காணாமல் இருக்க முடியவில்லை!
அறை நான்கு முடிந்து பூட்டும் போடப்படுகிறது. அடுத்து நாம்தான். பூட்டுத் திறப்பது மட்டும் கேட்டது. கதவைத் தள்ளினார்கள். வாங்கடா என்ற குரல். கடைசி அறை – அது உக்கிரம் அதிகமாக உள்ள நிலை. அலுத்துப் போய்விட்டவர்கள் அல்ல அவர்கள்! அதிகாரி வேறு வெளியில் நின்றபடி, என்னடா மெதுவாக அடிக்கிறீர்கள் என்று அதட்டுகிறார். உத்திரவு உக்கிரமாக வருகிறபோது உதை வேகத்தைக் கேட்கவா வேண்டும்.
சிறையல்ல – சித்திரவதைக் கூடாரம்
கதவு திறந்தது. யார் முன்னே வெளியில் செல்வது என்ற நிலை! காலம் கதவுகளை மூடப் போவதில்லை! அர்ச்சனைக்குக் கொண்டு வந்த அரசியல் மலர்களல்லவா நாங்கள். எனவே திரும்பிப் பார்த்தேன். தீர்மானமான நானே முதலில் வெளியில் வந்தேன். பெயர் சொல்லி அழைத்தனர். எதிர்பார்த்த ஆள் அல்லவா நான்! எனவே, ஓர் அடி எடுத்து வைப்பதற்குள் கன்னத்தில் வீழ்ந்த அறைகள் அடடா… நிலைக் கண்ணாடி கல்பட்டு உடைந்து விழுந்தது போல் எனக்குத் தோன்றியது. கண்களால் கணநேரம் காண்பது எல்லாம் கார்இருள் போல் இருந்தது. இருகோடுகளுக்கு இடையில் தள்ளப்பட்ட எலி! ஆம் அவர்கள் அடித்ததும் அப்படித்தான்! அவர்கள் அசந்தனர்! இது எலி அல்ல புலி என்று!
காரணம் அத்தனை அடிக்கும் என் உடல் விழவில்லை – தரை நோக்கி. தள்ளினார்கள் மதில் சுவர்மீது; சட்டென்று திரும்பிக் கொண்டேன்! வயிற்றில் எட்டி உதைத்து விட்டான்! சுவரின் மீதே சாய்ந்து கீழே உட்கார நினைத்தேன். ஆனால் நீண்ட நெடுமரத்தை மதயானை இடக்காலாலும், வலக்காலாலும், துதிக்கையாலும் வெறிபிடித்து உதைப்பது போல் உதைத்தனர். வீராசாமி நெடுமரமாகக் கீழே சாய்ந்து கிடந்தார்.
வெறிக்கூட்டம் முரசு பறை அறைவது போல் இரு கைகளால் அடிகொடுத்து கொண்டிருந்தன. ஒருபுறத்தில் இக்காட்சி. பள்ளிக்கூட மாணவன் பெஞ்ச் மீது நிற்பது போல் இரும்பு ஏணி அருகில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கதறும் வி.எஸ்.ஜி. ஒரே குத்துத்தான் நீலத்துக்கு (நீலநாராயணன்). குள்ள உருவம் நீலம். மேலே நிமிர்ந்து பார்த்திட மார்பகத்தில் மற்றொரு குத்து! முதுகில் இரண்டு தடி அடி! அவ்வளவுதான். குலைநோயில் கேவிக் கொண்டு கீழே விழும் நோயாளிபோல் சுருண்டு விழுவதைக் கண்டேன்! கால் எடுத்து வைத்துகை கொடுக்க முடியுமா என்று அசைந்தேன்! தொண்டையில் ஒரு குத்து எனக்கு! மீண்டும் சுவற்றில் தள்ளப்பட்டேன்! அய்யோ என்று சாய்ந்தேன் நான்.
அருகே என் அன்புத் தம்பி! ஆமாம் ஸ்டாலின்தான். தமிழகத்து முதல் அமைச்சரின் மகன் என்று நேற்றுவரை அறிந்த அந்த ஆசிரியன் (சுருளிராஜன்) தன் கால் பூட்ஸால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள்பட்டையில்! காக்கி உடை அணிந்த வார்டர் ஒருவன் ஸ்டாலின் கன்னத்தில் அறைந்தான். கொலை வெறியர்கள் தடிகளால் தாக்கினார்கள்.
கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது! மற்றவர்கள்தான் மண்ணுடன் சாய்ந்து கிடப்பவர்களாக இருக்கின்றனர்! உதவிக்கு எழ அவர்கள் முடியாதபடி அருகில் எமதூதர்கள்! என்ன செய்வது; எனக்கென்று ஓர் துணிவு! திடீரென்று குறுக்கே பாய்ந்தேன்! தம்பியை தள்ளிக் கொண்டே தடிகள் கழுத்தில்!
அவைகள் அடிகள் அல்ல! உலைக்களத்தில் பழுத்துக் காய்ச்சிய இரும்பை தட்டிப் பதப்படுத்தும் உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தது! கழுத்தில் அத்தனையும் தாங்கிக் கொண்டேன். அன்புத்தம்பி ஸ்டாலின் அறைக்குள்ளே ஓடிவிட வழி கிடைத்தது.
வீராசாமியை தூக்கி நிறுத்தி ஒரு குத்துவிட்டு உள்ளே தள்ளினர். நீலம் மூச்சுத் திணற வி.எஸ்.ஜி.யை தாங்கிப் பிடித்து அழைத்துச் சென்றார்!
தம்பி ஸ்டாலினோ தான் பட்ட அடிமறந்து, தன் உடன்பிறப்புகளை உள்ளே அழைத்துச் செல்லும் காட்சி கண்டேன். அவர்களைப் படுக்க வைக்க தன் தோள் துண்டை தரையில் போட்டு, தாக்கப்பட்டவர்களைத் தாங்கி படுக்க வைத்த காட்சி கண்டேன். என்னை ஒருவன் வாடா தம்பி, வா என்று வாயில் ஓர் குத்துவிட்டு உள்ளே தள்ளினான்.
சர்வாதிகாரத்தின் நச்சு நாக்கு
கொடிய காற்றில் நெடிய மரம் சாய்ந்து விழுவது போல் அறையில் நான் வீழ்ந்தேன்! இல்லை தள்ளப்பட்டேன். அறை முழுவதும் இருள் அல்லவா? நினைவு வேறு எனக்குப் பாதியாகத்தான் இருக்கிறது! பூட்டு பூட்டப்பட்டது! உள்ளே அழுகுரல்! முனகல்! அப்பா! அம்மா! என ஒலி.
அன்புத் தம்பி ஸ்டாலினோ அருகில் வந்தான். அண்ணன் நீலத்தை வி.எஸ்.கோவிந்தராசன் மார்பில் சாய்த்திவிட்டு, அவன்தன் பிஞ்சுக் கரங்களால் என் முகத்தை தடவிக் கொண்டே கேட்டான். அண்ணே இன்னும் உயிருடன் இருக்கிறீர்களா? ஆமாம்! அவன் கேட்டதில் நியாயம் இருக்கிறது! அடிக்க வந்தவர்கள் அல்லவே அவர்கள்! கொலை வெறித்தாக்குதல் அல்லவா நடத்தினார்கள்!
அன்புத் தம்பியோ அதிர்ச்சி அடைந்திடவில்லை, அழுகையில் என்னைக் காண்கிறான்! அவன் அச்சங்கொள்ளக் கூடாது என்று அன்பொழுகச் சொன்னேன். அடிபலமா உனக்கு என்றேன். அதெல்லாம் இல்லை அண்ணே என்று அனுபவம் பெற்றவன் போல் பேசினான்! தெம்பு குறையக் கூடாது என்பதற்காக. தம்பி உன்னையும் அடித்தார்களே பாவிகள் என்றேன்.
இருக்கட்டும் அண்ணே என்று சொல்லி அவன் என்னை தன் கரங்களால் அடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்துக் கொண்டே என் கிழிந்த சட்டையைக் கழற்றிட உதவி புரிந்தான்.
ஒருநாள் எங்களுக்கு உணவில் வேப்பெண்ணை ஊற்றிய சோற்றை வழங்கினார்கள். கசக்கிறது என்றனர் கழகத் தோழர்கள். கழுவிச் சாப்பிட வேண்டிய முறையை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன். அடுத்த நாள் இட்லி கொடுக்கப்பட்டது. நரநரவென்று மண்ணுடன் கூடிய மாவால் செய்யப்பட்டது. பகல் உணவு வந்தது. தட்டுடன் சென்றவர்கள் உப்பு அதிகம் உணவில் என்றனர். நீர் கலந்து கொள்ளுங்கள் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? (தியாக தீபமாம் கொள்கை மறவர் சிட்டிபாபு எம்.பி. அவர்களின் சிட்டிபாபுவின் சிறை டைரியை முழுவதுமாகத் தர இயலவில்லை. சிறைச்சாலைச் சித்ரவதையில் சீறும் வேங்கையாகச் சிறை சென்ற தியாக மறவன் சிட்டிபாபு 5.1.1977 அன்று உயிர் நீத்தார்.)
1977
23.01.1977ஆம் நாள் சென்னை மத்திய சிறையிலிருந்து முரசொலி மாறன் எம்.பி., மு.க.ஸ்டாலின், சோமா. இராமச்சந்திரன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். சிறை வாயிலில் அவர்களை அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று வரவேற்றனர்.
விடுதலை பெற்ற முரசொலி மாறன், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் நேராக முதலில் அறிஞர் அண்ணா துயிலுமிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின் இல்லம் சென்று தலைவர் கலைஞரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
1977 மார்ச் மாதத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் சுழன்று பணியாற்றி கழகப் பிரச்சாரம் செய்தார். அதன் பின்னும் தொடர்ந்து கழகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
1980
இந்நிலையில் கழகத்தில் உள்ள இளைஞர்களுக்கென ஒரு தனி அமைப்பு தேவையென கருதிய தலைவர் கலைஞர் தி.மு.க. இளைஞர் அணி என்னும் அமைப்பினை உருவாக்கினார். தி.மு.க. இளைஞர் அணியின் தொடக்க விழா, மதுரை மூதூரில், ஜான்சிராணி பூங்கா திடலில் 20.07.1980 அன்று நடைபெற்றது.
இளைஞர் அணி தொடக்க விழாவில் – அமைப்புச் செயலாளர் தென்னரசு, க. சுப்பு, வை.கோபால்சாமி, பி.டி.ஆர்.பழனிவேல்ராசன், துரைமுருகன், பொன்.முத்துராமலிங்கம், தா.கிருட்டிணன், வே.தங்கபாண்டியன், காவேரிமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
1982
01.08.1982 தி.மு.க. இளைஞர் அணியின் அமைப்புக் குழு உறுப்பினர்களாக மு.க.ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.. 17.8.82 இல் ஜெயம் ஜுலியஸ், முகவை பஞ்சவர்ணம் ஆகிய இருவரும் அமைப்புக் குழுவில் கூடுதலாக அறிவிக்கப்பட்டனர். கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனாரின் மணிவிழாவினை கழக இளைஞர் அணி சிறப்பாக நடத்தியது.
1983
10.04.1983 தி.மு.க. இளைஞர் அணிக்கு திரு. மு.க.ஸ்டாலின் அமைப்பாளராகவும், திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி, வாலாஜா அசேன், தாரை மணியன், முகவை பஞ்சவர்ணம், நெல்லை ஜெயம் ஜுலியஸ் ஆகியோர் அமைப்புக் குழு உறுப்பினர்களாகவும், பொதுச் செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டனர். இளைஞர் அணி அமைப்புக் குழு மாநிலம் முழுவதும் மாவட்டந்தோறும் சென்று அமைப்புக் கூட்டங்களை நடத்தி இளைஞர் அணி அமைப்புகளை உருவாக்கினர்.
1983 ஆகஸ்ட் 25ஆம் நாள் இளைஞர் அணிக்கு மு.க.ஸ்டாலின் செயலாளராகவும், திருச்சி சிவா, தாரை மணியன் இருவரும் துணைச் செயலாளர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
1984
மே மாதத்தில் நடைபெற்ற அண்ணாநகர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் பம்பரமென சுழன்று தேர்தல் பணியாற்றினார். தொகுதி முழுவதும் சைக்கிள் பேரணி, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு என இளைஞர் அணியினரைத் திரட்டிப் பணியாற்றியதன் விளைவாக அத்தொகுதியில் கழகம் வென்றது.
தலைவர் கலைஞர் அவர்களின் மணிவிழாவினை தி.மு.க. இளைஞர் அணி மிகுந்த எழுச்சியுடன் ஏற்பாடு செய்தது. நாவுக்கரசர் நாஞ்சில் கி.மனோகரன் அவர்களை நடுவராகக் கொண்டு, தலைவர் கலைஞர் அவர்களின் தொண்டால் ஜனநாயக வளர்ச்சி அதிகமா? சர்வாதிகார வீழ்ச்சி அதிகமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் வை.கோபால்சாமி, செ.கந்தப்பன், துரைமுருகன், இரகுமான்கான், பெ.சீனிவாசன், ஆலந்தூர் பாரதி, என்.வி.என்.சோமு ஆகியோர் வாதப்போர் புரிந்தனர்.
ஏப்ரல் மாதத்தில், தனித்தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் தி.மு.கழகம் கையெழுத்து இயக்கப் பணியில் ஈடுபட்டுக் கோடிக்கணக்கான கையெழுத்துக்களைப் பெற்று ஐ.நா. மன்றத்திற்கு அனுப்பி வைத்தது. அப்பணியில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியில் கையெழுத்து சேகரித்தார்.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாப அலையால் தி.மு.கழகம் 20 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மிதப்பில், எம்.ஜி.ஆர். சென்னை அரசினர் தோட்டத்தில் பல்லாண்டுகளாக இயங்கி வந்த தி.மு.கழகத்தின் சட்டமன்ற அலுவலகத்தினை பறித்துக் கொண்டார். இதனைக் கண்டித்த கழக முன்னணியினர் நீலநாராயணன், ஆர்க்காடு நா.வீராசாமி, செ.கந்தப்பன், மு.க.ஸ்டாலின், சி.டி.தண்டபாணி, எல்.கணேசன், நெல்லிக்குப்பம் வெ.கிருஷ்ணமூர்த்தி, துரைமுருகன், எஸ்.பி.சற்குணம் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். சட்டமன்ற தி.மு.க. அலுவலகத்தை பலவந்தமாகக் கைப்பற்றி வெளியேற்றிய போது தலைவர் கலைஞர் உள்ளத்தில் மேற்கொண்ட உறுதியால், சூளுரையால் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் அண்ணா அறிவாலயம் உருவாயிற்று.
அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவின் போது தி.மு.க. இளைஞர் அணி வெண்சீருடையில் மாபெரும் அணிவகுப்பை அணியின் செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடத்திக் காட்டியது.
1986
நவம்பர் 8, 9 ஆகிய நாள்களில் கோவை வ.உ.சி. பூங்கா திடலில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் கழக இளைஞர் அணி செயலாளர் தளபதி மு.க.ஸ்டாலின் தியாகிகள் திறந்து வைத்து உரையாற்றினார். அம்மாநாட்டில் நாடு முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாக்கும் அரசியல் சட்டப் பிரிவை கொளுத்துவது என்ற முடிவுக்கு அமைய அப்போராட்டத்தில் தலைமையேற்போரின் பெயர்களும், இடங்களும் அறிவிக்கப்பட்டன. நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நாடு முழுவதும் எண்ணற்ற கழகத்தவர் சட்ட எரிப்புப் போரில் ஈடுபட்டுக் கைதாகினர். அவர்களுள் பேராசிரியர் உள்ளிட்ட 10 கழக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க எம்.ஜி.ஆரின் அரசு சட்டமன்றத்தில் நடவடிக்கை எடுத்தது. இப்பதவி நீக்கும் தீர்மானத்தை அவை முன்னவரான நாவலர் நெடுஞ்செழியன் வாயிலாகவே எம்.ஜி.ஆர். முன்மொழிய வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் ஒருவரான பரிதி இளம்வழுதி சென்னை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராவார்.
1987
பேராசிரியர் உள்ளிட்ட 10 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறித்ததோடு நில்லாது – அ.தி.மு.க. அரசு கழகத்தின் மீது பழி சுமத்த வெடிகுண்டு சதி வழக்குகளையும் புனைந்தது. திருச்சியில், முத்தரசநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும், கோவை, சிங்காநல்லூர் வெடிகுண்டு வழக்கிலும் எல்.கணேசன், மலர்மன்னன், நாமக்கல் பழனிவேலன் போன்ற கழக முன்னணியினர் மீதும் கோவை மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மா.உமாபதி, துணை அமைப்பாளர் தம்புராசு, கோவை கார்த்திக், நவமணி, தங்கவேலு, ராமமூர்த்தி போன்ற இளைஞர் அணியினர் மீதும் பொய் வழக்குகள் தொடுக்கப்பட்டன. கோவை சிறையிலிருந்த இளைஞர் அணியினரை வழக்கு மன்றத்துக்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட போது கைகளில் விலங்கிட்டு வீதிகளில் நடத்தியே அழைத்துச் சென்றனர். அப்புகைப்படக் காட்சியை கண்ட தலைவர் கலைஞர், சிங்கள ஜெயவர்த்தனா சிரித்து மகிழ்ந்திடுவான் என்ற தலைப்பில் முரசொலியில் கடிதம் தீட்டினார்.
1987ஆம் ஆண்டு நடைபெற்ற கழக பொதுக்குழு தேர்தலுக்குப் பின் கழக இளைஞர் அணி மாநில செயலாளராக – மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை செயலாளர்கள் திருச்சி சிவா, மா.உமாபதி ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்ட பின்னால் கழகத்தின் தலைமைக் கழகம் அங்கே செயல்படத் தொடங்கியது. அதுவரை தலைமைக் கழகம் இயங்கி வந்த அன்பகத்தினைப் பயன்படுத்த சென்னை மாவட்ட தி.மு.க., தொழிற்சங்க பேரவை, இளைஞர் அணி ஆகிய மூன்று அமைப்புகளும் விரும்பின. அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் யார் முதலில் 10 லட்சம் ரூபாயை கழகத் தலைமைக்கு நிதியாகச் செலுத்துகிறார்களோ அவர்களுக்கே அவ்வாய்ப்பு கிட்டும் என்று அறிவித்தார். மூன்று அமைப்புகளும் அதை ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக் கொண்டு களமிறங்கின. தளபதி ஸ்டாலின் நாடு முழுவதும் கடுமையான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு, கொடியேற்று விழாக்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக நிதி திரட்டி தலைவர் கேட்டதற்கும் மேலாக ரூபாய் 11 லட்சத்தை ஒப்படைத்து அன்பகத்தை பயன்படுத்தும் உரிமையைப் பெற்றார். 1988ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் அன்பகத்தில் தி.மு.க. இளைஞர் அணி தலைமை அலுவலகம் செயல்படத் தொடங்கியது.
1989
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி கண்டு மத்திய அரசில் வி.பி.சிங் அவர்களின் தலைமையில் ஆட்சி அமைத்தது. அதுபோன்றே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் கலைஞர் அவர்கள் மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தார். இத்தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலார் மு.க.ஸ்டாலின், பெரம்பூர் தொகுதியில் சென்னை மாவட்ட அமைப்பாளர் பரிதி இளம்வழுதி முதலிய இளைஞர் அணி நிர்வாகிகளும் வெற்றி பெற்றனர்.
மூன்றாம் முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் அடுக்கடுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிச் சாதனை புரிந்தார். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றார். கழக ஆட்சியின் நூறு நாள் சாதனைகளை நாடறியச் செய்யும் வகையில் 1989ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் நாளில் கோவையில் கழக அரசின் சாதனை விளக்கப் பேரணி இளைஞர் அணியின் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கழக அரசின் நூறு சாதனைகளை விளக்கும் வகையில் நூறு அலங்கார வண்டிகள் பேரணியில் பங்கேற்றன.
1990

1 comment:

  1. தற்போது கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்பதை குறிப்பிடுங்கள் நண்பரே

    ReplyDelete