Tuesday, 15 January 2019

தமிழர் கண்ட கால அளவீடும் தை மாதம் தமிழ் புத்தாண்டான  வரலாறும்*

தமிழர் கண்ட கால அளவீடும் தை மாதம் தமிழ் புத்தாண்டான  வரலாறும்*

பழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. ஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை. திங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள். பண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.



சங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். "நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி"எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. "திங்கள் முன்வரின் இக்கே சாரியை" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.



மேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும். இதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.



"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை

நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே" (தொல்)


காலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.

தைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு

ஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும். பழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது. இந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.



சைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-



1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை



2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை



3. "தைஇத் திங்கள் தண்கயம் போல்" – புறநாநூறு



4. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு



5. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை



தைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன. இனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே. இப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.



'பத்தன்று நூறன்று பன்னூ றன்று

பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''



என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.



தமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.


சித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு

தமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது. அவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் "'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார். அதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.



ஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார். 'கிருஷ்ணா! எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா?  என வேண்டி நின்றார்.



பரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார். அந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது. இந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.



பிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர்கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக, இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.

நன்றி

-இலக்கியன்

No comments:

Post a Comment