கொங்கு வேளாளர் சமுதாயத்தை தலைநிமிர செய்த
கலைஞரை மறந்த கொங்கு வேளாளர்கள்
1975ல் முதல்வர் கலைஞரின் அறிவிப்புதான் இருண்டு கிடந்த கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு விடிவெள்ளி ஆனது. அனைத்து உட்பிரிவுகளையும் உள்ளடங்கிய கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தெளிவான அரசாணையாக 16.05.1975 அன்று (பு.ழ.ஆ.ள. ழே 371.னவ.16.05.1975) கலைஞரின் தமிழக அரசு வெளியிட்டது.
அதன் பிறகுதான் கொங்கு வெள்ளாளர் இனத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள், மருத்துவம், பொறியியல் போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைக்க ஆரம்பித்தது. கொங்கு வேளாளர் சமுதாயம் புதிய அத்தியாயம் காணத் தொடங்கியது. ஒரு சமுதாயம் அடுத்த நிலைக்கு முன்னேறி இருக்கிறது. துரதிர்ஷடவசமாக இந்தப் பகுதி மக்கள் வாக்களிக்காமல் தான் கலைஞர் தொடர்ந்து ஆட்சியை பறிகொடுத்தார் என்பதுவும் மிகவும் வருத்தத்திற்குரியது.
கொங்கு வேளாளர் மட்டுமல்ல, தமிழகத்தின் பிற சாதி மக்களுக்கும் இட ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்தவர் கலைஞர். ஒரு மாநில வளர்ச்சிக்கு சமூகநீதி எவ்வளவு முக்கியமானது என்பதை 60-70 களிலேயே உணர்ந்து செயல்பட்டவர் கலைஞர்
1) கொங்கு பகுதியில் வேளாண்மையை செழிக்கச் செய்ய பரம்பிக்குளம்-ஆழியாறு, வட்டமலைக் கரை, நல்லதங்காள் ஓடை திட்டங்களின் விரிவாக்கங்களை கலைஞர் நிறைவேற்றினார்
2) 1967 – 76 ஆட்சியின் காலக்கட்டத்தில் கொங்கு மண்டலத்தில், கோவையில் ஒரு சில பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள் மட்டுமே உண்டு.
பின்னலாடையினால் திருப்பூர் தொழில் நகரமானது பின்னாளில் தான்.
ஒட்டு மொத்த கொங்கு மண்டலமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை. சென்னைக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய நிலைதான்.
கொங்கு பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட கவுண்டர்கள் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர்.
1955 – ஆம் ஆண்டு திரு. காகா கலில்கார் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு கமிசன் அறிக்கையில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்திருந்தது.
தமிழ்நாட்டில் மூன்று பெரிய சமுதாயமான கொங்கு வேளாளர், வன்னியர், முக்குலத்தோர், ஆகியோர் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் சமுதாயமாகும்.
அதில் வன்னியர், முக்குலத்தோர் வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். ஆனால் கொங்கு வேளாளரை மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை.
அதனை தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினரான மிசா சாமிநாதன், தன்னுடன் பலரையும் சேர்ந்துக் கொண்டு அந்தக் கோரிக்கையை முன் வைக்கிறார்.
1975ம் ஆண்டு கலைஞர், கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது சமுதாய வரலாற்றில் யாரும் மறக்க முடியாத நிகழ்வாகும்.
3) தேர்வாணையக் குழுவில் (TNPSC) தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் பதவி இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மிகப் பெரிய சமுதாயமான கொங்கு வெள்ளாளருக்கு 1929 ஆம் வருடத்தில் இருந்து 1974 ஆம் வருடம் வரை ஒரு முறை கூட ஒரு உறுப்பினர் பதவி தரப்படவில்லை.
அந்த கோரிக்கைக்காக முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அன்றைய முதல்வர் கலைஞர் அக்கோரிக்கையை மனமார ஏற்று கொண்டார்.
அதன்படி தமிழ்நாடு தேர்வாணை குழு உறுப்பினராக கொங்கு வேளாள சமுதாயத்தைச் சேர்ந்த திரு ஏ. பழனிசாமி அவர்களையே கலைஞர் அரசு நியமித்தது. அவர் 26 .06 .1974 அன்று அப்பதவியை ஏற்றுக் கொண்டார். கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தின் 44 ஆண்டுகால கனவு நினைவாகியது. அதன் பிறகுதான் குரூப்-1 தேர்வில் அச்சமுதாயத்தினர் தேர்வாகத் தொடங்கினார்கள்.
கார்த்திகேய சிவசேனாபதி
By Antony Parimalam
No comments:
Post a Comment