மின் நிலைமை சீரானதற்கு திமுக ஆட்சியே காரணம்: பொய் பரப்பிய ஜெயலலிதாவிற்கு கலைஞர் தந்த பதில்
இது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "25–10–2013 அன்று தமிழக சட்டப்பேரவையில் பொதுவுடைமை கட்சிகள் எழுப்பிய தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கக்கோரும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு; முதல்வர் ஜெயலலிதா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் மின் தட்டுப்பாடு குறித்து நீண்ட விளக்கம் அளித்தது பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் "முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூழ்கியது" என்று நம்மை குற்றம் சாட்டிய காரணத்தால்தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டியவனாக நான் இருக்கிறேன்.
முதல்வர் ஜெயலலிதா 2–11–2012 அன்று சட்டமன்றத்தில் விரைவில் மின்உற்பத்தி துவக்கப் படவுள்ள திட்டங்கள் என்று சிலவற்றை குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டதில், மேட்டூர் (600 மெகாவாட்) 25–6–2008 அன்றும்; வல்லூர் 1–ம் அலகு (500 மெகாவாட்) 13–8–2007 அன்றும்; வல்லூர் 2–ம் அலகு (500 மெகாவாட்) 13–8–2007 அன்றும்; வல்லூர் 3–ம் அலகு (500 மெகாவாட்) 13–8–2007 அன்றும்; வடசென்னை (1–ம் அலகு) (600 மெகாவாட்) 18–2–2008 அன்றும், வடசென்னை (2–ம் அலகு) (600 மெகாவாட்) 18–2–2008 அன்றும்; தூத்துக்குடி (இரண்டு அலகுகள்–1000 மெகாவாட்) 28–1–2009 அன்றும், ஆக இந்த ஏழு திட்டங்களுமே தி.மு.கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டவைதான்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று படித்த அறிக்கையில், தி.மு.க ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்களை உரிய காலத்தில் தீட்டவில்லை என்று கூறிவிட்டு, அவரே "600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப்பணிகளை பொறுத்தவரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது" என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே மேட்டூர் திட்டம் கழக ஆட்சியில் 55 விழுக்காடு முடிக்கப்பட்டதை அவரே ஒப்புக் கொள்வதுதானே? ஆனால் தி.மு.க. ஐந்தாண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது என்று ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார்.
2011–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பேரவையில் வைத்த மானிய கோரிக்கையில், மேட்டூர் திட்டம் 2012–ம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்கள். அவர்களே தெரிவித்தவாறு 2012–ல் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் மேலும் ஓராண்டு கால தாமதம் ஆனதற்கு எந்த ஆட்சி காரணம்?
அதைப்போலவேதான் வடசென்னை அனல் மின் நிலையத் திட்டங்கள் பற்றியும் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். அந்த திட்டம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டதை அவரே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த திட்டங்களையெல்லாம் அவருடைய ஆட்சியில் முடுக்கி விடப்பட்டதன் காரணமாகத்தான் மின்சாரம் இப்போது கிடைக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்.
தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டங்களை தொடங்காமல் இருந்திருந்தால், இப்போது இந்த மின்சாரமாவது கிடைத்திருக்குமா? தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதால்தானே இவரால் அந்த திட்டத்தை முடிக்க முடிந்திருக்கிறது.
வல்லூர் மின்திட்டப்பணிகள் துவக்கப்பட்ட நாள் ஜெயலலிதா ஆட்சியிலே அல்ல. 13–8–2007 அன்று கழக ஆட்சியிலேதான் மத்திய மின்துறை அமைச்சராக இருந்த ஷிண்டேவால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த திட்டம் தொடங்கிய போதே தோராயமாக மின்உற்பத்தி துவக்கம் முதல் அலகில் டிசம்பர் 2012 என்றும், இரண்டாவது அலகில் மார்ச் 2013 என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தி.மு.கழக ஆட்சியில் இத்திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றதாக ஜெயலலிதா கூறுகிறார்.
மற்ற திட்டங்கள் எல்லாம் கழக ஆட்சியில் இத்தனை சதவிகிதம் நடந்ததாக கூறிய ஜெயலலிதா, இதற்கு மட்டும் ஏன் எத்தனை சதவிகித பணிகள் நடைபெற்றன என்று கூறவில்லை? மேலும் அந்த திட்டத்தின் மூலமாக மின்உற்பத்தி 29–11–2012 அன்றே தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கழக ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் இதற்கு காரணம் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
"மேற்கண்ட புதிய அனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உற்பத்தியை தொடங்கியுள்ளதால் தற்போது கூடுதலாக 1700 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்து வருகிறது" என்று ஜெயலலிதா நேற்று பேசும்போது தெரிவித்திருக்கிறார். இந்த 1700 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலமாக கிடைத்திருப்பதுதான். இதனை யாராவது மறுக்க முடியுமா?
"தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்து வரும் 1,000 மெகாவாட் அனல் மின் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன" என்று ஜெயலலிதா நேற்று கூறியிருக்கிறார். தூத்துக்குடியில் நடைபெறும் இந்த திட்டத்தின் பணிகள் துவக்கப்பட்ட நாள் 28–1–2009. அதுவும் தி.மு.கழக ஆட்சியிலேதான்.
அ.தி.மு.க. ஆட்சியிலே மின்சாரத்தைப்பெற எதுவுமே செய்யவில்லையா என்று யாராவது கேட்பீர்களேயானால், நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை. செய்திருக்கிறார்கள். என்னவென்றால், பிற மாநிலங்களிலே இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாங்குவதற்கு ஏற்பாடு செய்து, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட கால அடிப்படையில் கூடுதல் மின்சாரத்தை இவ்வாறு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா நேற்று பேசும்போது, 2001–2006–ல் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்ததாக சொல்லியிருக்கிறார். அதற்கு காரணம் 2001–ம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தி.மு. கழக ஆட்சியில் மின்உற்பத்திக்காக போடப்பட்ட திட்டங்கள்தானே?.
தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டது பற்றி ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருப்பதை ஆதாரமாக காட்டி விளக்கியிருக்கிறேன். தற்போது நான் கேட்கிறேன். அ.தி.மு.க. ஆட்சி 2011–ல் தொடங்கி 2½ ஆண்டுகளாகிறதே, இதுவரை எத்தனை மின்உற்பத்தி திட்டங்களுக்கு பணி தொடங்கப்பட்டுள்ளது? 2011–2012–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வைத்த கொள்கை விளக்க குறிப்பில், வடசென்னை நிலை 3, வடசென்னை நிலை 4, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா நீரேற்று புனல் மின்நிலைய திட்டங்கள் 28,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012–ம் ஆண்டு பணி தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தீர்களே? இதில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு பணி தொடங்கப்பட்டுள்ளதா?
உடன்குடி விரிவாக்கம், உப்பூர் அனல் மின்நிலையம், எண்ணூர் அனல் மின்நிலையம்–மாற்று, தூத்துக்குடி அனல் மின்நிலையம்–நிலை 4 ஆகிய 8,000 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்களை 22,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்போவதாக அறிவித்திருந்தார்களே, இதில் ஏதாவது ஒரு திட்டமாவது இந்த இரண்டரை ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக்கிறதா? சொல்லத்தயாரா?
"2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக்காலத்தில் கூடுதல் மின் நிறுவுத்திறன் ஏற்படுத்தப்பட்டது" என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். 2001–2006–ம் ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக செலவிடப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.700 கோடிதான். ஆனால் 2006–2011–ம் ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக தி.மு.க. ஆட்சியில் செலவழிக்கப்பட்ட மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா? 11,700 கோடி ரூபாய்.
5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,572 கோடி ரூபாய் ஜப்பானிய நிதி உதவியுடன் ஒரு திட்டத்தை அறிவித்ததாக முதல்வர் நேற்று பேசியிருக்கிறார். இந்த திட்டத்தையும் ஜெயலலிதா எப்போது அறிவித்தார் என்று நான் கூறுகிறேன். 25–4–2013 அன்று ஜெயலலிதா படித்த 110–வது விதியின் கீழான அறிக்கையிலேதான் இதை குறிப்பிட்டிருந்தார்.
அறிவித்து ஆறு மாதங்களுக்குப்பிறகு நேற்றைய தினம் இதற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக பேரவையில் அறிவித்திருக்கிறார் என்றால் எவ்வளவு வேகமாக அ.தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது என்பதை நான் விளக்க வேண்டுமா?
குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்காதது ஏன்..?
மின் உற்பத்தி பற்றி பேசிய முதல்வர், காற்றாலை மின்உற்பத்தி பற்றி வாயே திறக்கவில்லை. 2011-ம் ஆண்டு கொள்கை விளக்கக்குறிப்பில், தனியார் மூலம் 10,000 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். தற்போது காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வாங்க மறுப்பதாக சொல்லப்படுகிறதே அது உண்மையா, இல்லையா?
தற்போது மின்தேவை அதிகம் இருப்பதால் காற்றாலை மூலம் அதிகளவு தனியாரிடம் வாங்கினால், மின்வெட்டை தாராளமாகக் குறைக்கலாம். குறைந்த விலையில் கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை வாங்காமல் அதிக விலை கொடுத்து வேறு மாநிலங்களில் இருந்து அரசு மின்சாரத்தை வாங்க முயற்சிக்கிறது என்ற தகவல் சரியா? தவறா?" என்று கலைஞர் வினவியுள்ளார்.
No comments:
Post a Comment