Friday, 5 April 2019

நீட் தேர்வின் கொடூர முகம்...


நீட் தேர்வின் கொடூர முகம்...
மருத்துவப்படிப்பில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனைபேர்? ஆர்.டி.ஐ. தரும் அதிர்ச்சித் தகவல்
தமிழகத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு தகர்த்து வருகிறது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2018-19-ம் கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
தனியார் பள்ளி மாணவர்களில் 20 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களில் 611 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மேலும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களின் இருப்பிடச் சான்றிதழைச் சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 191 மாணவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளதாக RTI தகவல் மேலும் தெரிவிக்கிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளியைச் சேர்ந்த ஒரே ஒரு மாணவருக்குத்தான் இடம் கிடைத்துள்ளது.
அதேநேரத்தில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3 பேருக்கும், சி.பி.எஸ்.இ பள்ளிகளைச் சேர்ந்த 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
தமிழக இருப்பிடச் சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப் படிப்பை முடித்த 70 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டுகளில் மருத்துவப் படிப்பை முடித்து, இந்த ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் 1,277 பேருக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 557 பேருக்கும் இடம் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அறிவியல் பாடத்தை எடுத்துப் படித்த 3 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களிலிருந்து, 5 பேருக்குத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது

குறிப்பாக, கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் ஓராண்டு நீட் பயிற்சி எடுத்து 1,834 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
மொத்தமுள்ள 3,456 இடங்களில் இது 50 சதவிகிதத்துக்கும் அதிகம். நீட் தேர்வில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக, வெளிமாநிலங்களில் கோச்சிங் எடுக்கின்றனர்.
தமிழகத்தில் முன்பெல்லாம் 99 சதவிகிதம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்குத்தான் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்து வந்தது. ஒரு சில இடங்களிலேயே சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குக் கிடைக்கும்.
தற்போது கோச்சிங் சென்டர் செல்பவர்கள் மற்றும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்குத்தான் மருத்துவ சீட் என்ற நிலையை நீட் ஏற்படுத்தியுள்ளது

தனியார் கோச்சிங் சென்டர்கள் வருடம் முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன
ஆனால், தமிழக அரசின் கோச்சிங் சென்டர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இயங்கி வருகின்றன.
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தீமைகள்
1) ஏழை மாணவர்களுக்கு பெரும் அநீதி
மருத்துவப் படிப்பில் சேருவோரில் 99 விழுக்காட்டினர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது கோடீஸ்வரர்களால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பது தான்.
2) அரசுப்பள்ளியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களாக அதிகம் செலவு செய்து பயிற்சி வகுப்புகளில் சேர இயலுமா?
அல்லது
மீண்டும் அடுத்த வருடம் செலவு செய்து NEET தேர்வை எழுத காத்திருக்க முடியுமா?
3) 12 ஆண்டுகள் ஒரு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களிடம் வேறு ஒரு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்டது அயோக்கியத்தனமில்லையா?
4) அது மட்டுமின்றி வெளிமாநிலங்களுங்கு அனுப்பி அலைக்கழிதல் வேறு
இது உளவியல் ரீதியாக அவர்களை பாதிக்காதா?
ஏழைகளுக்கு சமவாய்ப்பு தராத எந்த தேர்வும் ஒழிக்கப்பட வேண்டும்.
இது காலப்போக்கில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இந்த நிலையை மாற்ற நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்.
Antony Parimalam  

No comments:

Post a Comment