Monday, 6 August 2018

புலிகளை ஆதரிப்போர் தேச விரோதிகள்-ஜெயலலிதா October 23 2008,

புலிகளை ஆதரிப்போர் தேச விரோதிகள்-ஜெயலலிதா
October 23 2008, 10:10 [IST]

https://tamil.oneindia.com/news/2008/10/23/tn-ltte-supporters-are-anti-nationals-says-jayalalitha.html

விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மேலும் வைகோவையும் அவர் மறைமுகமாக கடுமையாக கண்டித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவான செயல்கள் தமிழ்நாட்டில் தற்போது மீண்டும் நடைபெற்று வருகின்றன. இலங்கைத் தமிழர் படுகொலையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிரான பல ஆட்சேபகரமான, தேசவிரோத கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

தனித் தமிழ்நாடு' என்ற அளவுக்குத் துணிச்சலாகப் பேசியிருக்கிறார்கள் (மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் பேசியது). இத்தகைய பேச்சுக்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆயுதம் ஏந்தவும் தயார்' என்ற அளவுக்கெல்லாம் தற்போது பேச ஆரம்பித்துவிட்டார்கள் (மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியது).

இப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான தேச விரோத கருத்துகளைத் தெரிவிப்பவர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், நளினி உள்பட சிலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது.

இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி.

மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்க்கிறார். இப்படிப் போய் பார்க்கலாமா? இது அடுக்குமா?. இப்போது நளினி ஏதோ உரிமைக்காகப் போராடுவது போல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது!.

இது சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்தப் பிரச்சினை அல்ல. அவர்களுடைய குடும்பப் பிரச்சினை அல்ல. இது ஒரு நாட்டுப் பிரச்சினை. ஒரு முன்னாள் பாரதப் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை.

தற்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன். எனது ஆட்சிக் காலத்தில் இது போன்று பேசியவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவர்களை சிறையில் அடைத்தேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளைப் பேச ஆரம்பித்துவிட்டனர். பொடா இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்.

தீவிரவாதம், பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை எதிர்ப்பது என்ற கொள்கையில் அதிமுக தொடர்ந்து உறுதியாக உள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பை எதிர்க்கின்ற ஒரே தலைவர் நான் தான்.

பிரபாகரனை நம்பி இலங்கைத் தமிழர்கள் இல்லை. பிரபாகரன் ஒரு அழிவு சக்தி. போர் நிறுத்தம் என்று சொல்லி, ஆயுதங்களையும், தனக்குத் தேவையான பொருட்களையும் சேகரித்துக் கொள்வார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை நான் தீவிரமாக எதிர்ப்பதற்கு காரணம், அந்த அமைப்பு இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது. எல்லாவிதமான தேசவிரோத சக்திகளுக்கும் அந்த அமைப்பு ஊக்கம் அளிக்கிறது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியை இந்திய மண்ணிலேயே, தமிழ் நாட்டு மண்ணிலேயே கொலை செய்த அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு.

இந்தியாவைத் துண்டாட நினைக்கின்ற தேச விரோத அமைப்பு விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் போர் பிரிவு, நக்சலைட், உல்பா, லஷ்கர்-ஏ-தொய்பா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ போன்ற சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு தொடர்பு இருந்து வருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் ஆகும். விடுதலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் தமிழ் துரோகிகள் என்றால், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் தேசத் துரோகிகள்.

பிரிவினைவாதம், தனித் தமிழ்நாடு போன்ற தேச விரோதச் செயல்களை அதிமுக கடுமையாக எதிர்க்கும். இதில் எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை என்பதை நான் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment