திராவிட இயக்கம் பெரியார் காலத்தில் இருந்த வீச்சோடு இப்போதும் இருக்கிறதா?
பெரியார் மிகப்பெரிய அளவில் செயல்பட்டார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் பெரியாருக்குப் பிறகு வந்த அவரது இயக்கத்தினர் அவரது எல்லாக் கொள்கைகளையும் உள்வாங்கிக் கொண்டு அவர் அளவுக்கு வீச்சாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
இன்றைக்கு இயங்கிக் கொண்டிருப்பது ஒரு இயக்கம் உருவானதற்குப் பிந்தைய சமூகம். அந்த இயக்கத்தின் தாக்கம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிலர் நாத்திகர்களாக இருக்கிறார்கள், சிலர் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள், சிலர் மொழிப்பற்று உடையவர்களாக இருக்கிறார்கள்.
பெரியார் வைத்த அடிப்படைக் கருத்து என்பது அதிகாரப் பங்கீடு, அதிகாரப் பரவலாக்கல்.
சனாதன தர்மம் அதிகாரத்தை ஒரு சாராரிடமே குவிக்காமல் இருந்திருந்தால் சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவமரியாதை ஏற்பட்ட போது சுயமரியாதை இயக்கம் தோன்றியது. எனக்கு இன்றைக்கு அவமரியாதை இல்லை என்று தோன்றும்போது, அன்றைக்கு இருந்த வீச்சோடு இன்றைக்கும் செயல்பட வேண்டுமா என்ற கேள்வி வருகிறது.
இன்று அதிகாரத்தில் இருப்பது நாம்தான், முக்கிய முடிவுகளை எடுப்பதும் நாம்தான் எனும்போது அந்த அளவுக்கு வீச்சு தேவையில்லை.
அதிகாரப் பரவலாக்கம் தான் எல்லாப் பிரச்சனைக்கும் அடிப்படை. இந்த அதிகாரப் பகிர்வு பரவும்போது திராவிட இயக்கக் கொள்கைகள் நீர்த்தது போலத் தோன்றும். எல்லா இடங்களிலும் பார்ப்பனர்களே இருக்கும்போது அதை எதிர்த்து அதிகமாக இயங்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று மாற்றங்கள் வந்திருக்கிறது. நமக்கான முடிவுகளை நாமே எடுக்க முடிகிறது எனும்போது இன்றும் அதே அளவு கூர்மையுடன் எப்படி செயல்பட முடியும்? அப்படி செயல்பட்டால் அது நமது வெற்றியை நாம் மதிக்கவில்லை என்றுதான் பொருள்.
67ல் அரசியல் அதிகாரம் வந்தது. 80களில் பொருளாதார ரீதியான மாற்றங்கள் வருகிறது. முன்பு பார்ப்பனர்களின் தொழில் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக செட்டியார்களின் தொழில் நிறுவனங்கள் தான் இருக்கும். இன்று நிலைமை மாறி 70 சதவீத தொழில் நிறுவனங்கள் பார்ப்பனர், செட்டியார் அல்லாதவர்களிடம் தான் இருக்கிறது. இன்று அவமரியாதை குறைந்திருக்கிறது. அவமரியாதை குறைந்திருக்கும் போது சுயமரியாதை இயக்கம் அதே வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
திராவிட இயக்கம் என்பது வெற்றிடத்தில் கட்டப்பட்டதல்ல, சமூக, பொருளாதார காரணிகளின் மீது கட்டப்பட்டது. இப்போது அந்தக் காரணிகள் மாறியிருக்கும்போது இயக்கம் மட்டும் எப்படி அதே வீச்சோடு இருக்க முடியும்? அந்த வீச்சு மாறக்கூடாது என்று சொல்பவர்கள், ‘மாற்றம் என்பதே வரக்கூடாது’ என்ற நிலைப்பாட்டில் இருப்பவர்களாகத்தான் இருக்க முடியும்.
நன்றி எழுத்தாளர் A.S.Panneerselvan
No comments:
Post a Comment