Sunday 17 September 2017

நவோதயா பள்ளிகளால் நன்மையா அல்லது தீமையா ?- ஓர் அலசல்



நவோதயா பள்ளிகளால் நன்மையா அல்லது தீமையா ?- ஓர் அலசல்

நவோதயா பள்ளிகளுக்கு 6 ஆம் வகுப்பிற்கு ஆண்டிற்கு 80 மாணவர்கள் தேர்தேடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 30 பள்ளிகள் துவங்கினால் 30×80=2400 மாணவர்களை ஒரு ஆண்டில் தமிழகத்தில் சேர்க்கலாம்.

நவோதயா பள்ளியில் சேர 5 ஆம் வகுப்பிலேயே Jawahar Navodaya Vidyalaya Selection Test(JNVST) என்ற Entrance Test அதாவது Neet மாதிரி தேர்வு எழுத வேண்டும். எழுதுபவர்களில் 100 க்கு 2 பேரே மற்ற மாநிலங்களில் தேர்வாகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 20,00,000 குழந்தைகள் 5 ஆம் வகுப்பில் பாஸ் ஆகிறார்கள்( 2010 இல் Primary enrollment 9797264 குழந்தைகள்)

இந்த 20 லட்சம் குழந்தைகளில் 2400 பேரை மட்டும் நவோதயா பள்ளிகளில் சேர்ப்பார்கள். அவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்கும். மீதமுள்ள 19,97,600 குழந்தைகளுக்கு சாதாரண கல்வி.
அந்த 2400 பேரில் பலர் Neet எழுதி பாஸ் ஆகமுடியும்.  மற்றவர்கள் கதி?

1) கல்வி கற்பதில் ஏற்றத்தாழ்வை
உண்டாக்காதே

நமது கோரிக்கை ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் சிறப்பான கல்வி கற்க சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான்

CBSE பள்ளிகளில் கேந்திரிய வித்யாலாயா பள்ளிகளில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் போல அரசுப்பள்ளி குழந்தைகளுக்கும் சமச்சீரான கல்வி வழங்கப்பட நடவடிக்கை எடுப்பதே மத்திய அரசின் கடமை.
அதை விடுத்து கல்வி கற்பதில் நவோதயா போன்ற பள்ளிகளை நுழைத்து கல்வியில் ஏற்றத்தாழ்வை உருவாக்க வேண்டாம் என்கிறோம்.

தரம் பிரித்து வித்தியாசம் பார்ப்பதால்தான் அனிதா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

பல நூறு கோடி ரூபாய்களை ஒரு குறிப்பிட்ட பள்ளிக்கு மட்டும் செலவழிப்பதற்கு பதில், அனைத்துப் பள்ளிகளுக்கும் சமமாக செலவழிப்பது தான் பொதுப்பள்ளி முறை. இதைத்தான் கோத்தாரி குழு பரிந்துரை செய்திருந்தது.  

எனவே நவோதயா  பள்ளிகளைத் தொடங்கி ஏற்றத்தாழ்வை விதைக்காதீர்கள். நியாயப்படுத்தாதீர்கள்

2) நவோதயா பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு NEET மாதிரி தேர்வு வைப்பது சரியான நடைமுறையா?

படிக்கவே லாயக்கில்லை என பள்ளியில் இருந்து வெளியே துரத்தப்பட்ட ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் போன்றவர்கள்தான் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானிகள் ஆனார்கள்.

3)நவோதயா பள்ளிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இயங்கும் இந்தப் பள்ளிகளில் மும்மொழிப் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதில் இந்தி மொழி கட்டாயமாகவும், அந்தந்த மாநில மொழியை கற்பிக்கும் மொழியாகவும், அறிவியல், கணிதத்துக்கு ஆங்கிலமும், மனிதவளம் சார்ந்த ஒழுக்கப் பாடங்கள் போன்றவை இந்தியிலும் கற்றுத்தரப்படுகின்றன.

தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கை இருக்கிறது. நவோதயா பள்ளிகளில் மும்மொழி கொள்கை உள்ளது.
இந்தித் திணிப்பு என்பதை விடவும், நவோதையா பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமூக அறிவியல் பாடத்தில் தமிழ் மொழி சார்ந்த, தமிழ்நாடு சார்ந்த பண்பாடு, வரலாறு எதுவுமே இல்லை. இதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள முடியும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று கோத்தாரி குழு பரிந்துரை செய்த து. இந்த சூழலில் நவோதயா பள்ளிகள் என்ற பெயரில், தகுதி வாய்ந்த குழந்தைகளுக்கு தனியாக பயிற்சி அளித்து உருவாக்குவது சரியான விஷயமாக இருக்காது.

4) நவோதயா பள்ளிகளில் BC, MBC க்கு இட ஒதுக்கீடு கிடையாது. இது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் தேவைக்கேற்ப மாநில பாடத்திட்டத்தை வகுத்துக்கொள்ளவும், கற்பித்தலை மேம்படுத்தவும் உரிமை பெற்றுள்ளன. பயிற்று மொழியைத் தீர்மானிக்கும் உரிமையும் மாநில அரசுகளுக்கு உண்டு. ஆனால், மத்திய அரசு அரசியல் சட்டம் அளித்துள்ள சமத்துவம், சமநீதி உரிமைகளை மறுக்கும் வகையில் மத்திய பள்ளிகளை மாநிலங்களில் திணிக்க முற்படுவது ஏற்கத்தக்கது அல்ல.

By Antony Parimalam / A Parimalam

1 comment: