Friday 10 August 2018

விடுதலைப் புலிகள் போரில் தோற்றது ஏன்? கலைஞர் விளக்கம்

விடுதலைப் புலிகள் போரில் தோற்றது ஏன்? கலைஞர் விளக்கம்

தமிழீழம் பெறுவதற்கான போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி முகட்டை  எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று போரிடாததுதான்  என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,”இலங்கையிலே ஈழத் தமிழர்களுக்கு  எதிராக போர் நடைபெற்றபோது;இன்றைக்கு ஈழத் தமிழர்கள்பால் நாம் காட்டுகின்ற  உணர்வு பூர்வமான அக்கறையை,அன்றே காட்டியிருக்கக் கூடாதா?

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போராட்டத்தை அப்பொழுது அங்கே ஆயிரக்கணக்கான  ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதை நாம் தடுத்து நிறுத்தியிருக்கலாமே; என்ற ஒரு  எண்ணம், ஆதங்கம் இங்குள்ள தமிழர்கள் சிலருக்கு மாத்திரமல்லாமல், தரணியெங்கும்  பரவிக்கிடக்கிற தமிழர்களில் சிலருக்கும் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது!

ஆனால் அவர்களுக்கே தெரியும்!இந்தப் போரில் விடுதலைப் போராளிகள் வெற்றி  முகட்டை எட்டாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம், அவர்கள் ஓரணியாய் நின்று  போரிடாததுதான் என்பது ஓர் புறமிருக்க; பல்வேறு அணிகளாக இருந்த போராளிகளும்  ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு - தமிழர் உயிரை தமிழரே பறிப்பதற்கு  காரணகர்த்தாக்களாக ஆகிவிட்டார்கள்.

சகோதர யுத்தம் வேண்டாம் என்று காலில் விழாத குறையாக அவர்கள் ஒவ்வொரு  அணியினரின் கரம் பிடித்து கெஞ்சிக் கேட்டுக் கொண்டுங்கூட,அந்த அணிகளிடையே  இருந்த உட்பகையை நம்மால் தீர்க்கவும் முடியவில்லை;அதன் காரணமாக ஏற்பட்ட  விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியைத் தடுக்கவும் முடியவில்லை.

தி.மு.க. அரசின் சார்பாக இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக 14-10-2008 அன்று  அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி,இலங்கையில் இரண்டு வார  காலத்திற்குள் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முன்வராவிட்டால், தமிழகத்தைச்  சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று ஒரு  தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.அதையொட்டி,கழகத்தைச் சேர்ந்த மக்களவை  உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவி விலகல்  கடிதங்களை என்னிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டார்கள்.

18-10-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகவே தொலைபேசியில்  இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன் பேசினார்.22-10-2008 அன்று மத்திய மந்திரி  பிரணாப் முகர்ஜி இலங்கைத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க இலங்கை அரசை  வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்றத்திலே குறிப்பிட்டார்.24-10-2008 அன்று  சென்னையில் பிரமாண்டமான "மனித சங்கிலி''ஒன்றினை நடத்தினோம். 26-10- 2008 பிரணாப் முகர்ஜி சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல்  இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துப் பேசினார்.இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற,  மத்திய அரசு போர் நிறுத்தத்திற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி  23-4-2009 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்பட வேண்டுமென்றும்  கேட்டுக்கொண்டு அறிக்கை விடுத்தேன்.

அந்த வேலை நிறுத்தம் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற்றது.

26-4-2009 அன்று விடுதலைப்புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  இந்தியா, அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐ.நா. சபை ஆகியவற்றின்  கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம்.இந்தக் காலவரையற்ற போர் நிறுத்தம்  உடனே அமலுக்கு வரும்.இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ் மக்கள்  அனுபவிக்கும் துன்பம் உச்ச நிலையை எட்டியுள்ளது.இலங்கை அரசும் போர் நிறுத்தத்தை  அறிவிக்க வேண்டும் என்று அறிவித்தார்கள்.

ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் இலங்கை அரசு அந்த அறிவிப்பை "ஜோக்''  என்று கேலி செய்தது. 26 ம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்கு பின் அன்றிரவு  முழுவதும் நான் தூங்கவில்லை.

போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு  கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன்.உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பல  முறை தொடர்பு கொண்டேன்.பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார்.  வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு  கொண்டு பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதிகாலை 4 மணி வரையிலே தொலைக்காட்சியில் நல்ல செய்தி வருமா என்று  எதிர்பார்த்தேன்.எந்தச் செய்தியும் வரவில்லை.இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை  என்ற செய்திதான் கிடைத்தது. அதற்குப் பிறகுதான் 5 மணி அளவில் என் வீட்டாரிடம்  அறிவாலயம் செல்கிறேன் என்று கூறி விட்டு, அண்ணா நினைவிடத்திற்குச் சென்றேன்.

அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் மிகப் பெரிய அறுவை சிகிச்சை ஒன்றை என் முதுகிலே  இந்த வயதிலே செய்து கொண்டு,நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியிலே பயணம்  செய்து கொண்டிருந்த நான் என் உடல் நிலையைப் பற்றியோ வேறு எதைப் பற்றியோ  கவலைப்படாமல் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவோடுதான்  யாருக்கும் கூறாமல்,கூறினால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால்,நானாக  முடிவெடுத்துச் சென்றேன். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எல்லாம் நேரில் வந்து  உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்திய பிறகு மதியம் 1 மணி அளவில் நான்  உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.

ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்ஷேயின் சிங்கள பேரினவாதப்  பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர்.  போராட்டத்தை நிறுத்துவதற்கான எவ்வளவோ முயற்சிகளை நாம் மேற்கொண்டோம்,  அதற்கு உறுதுணையாக மத்திய அரசும், பிரதமரும், மத்திய மந்திரிகளும் இருந்தும்  கூட, சிங்கள அரசினர் அளித்த வாக்குறுதிகளையெல்லாம் ஒவ்வொரு முறையும் மீறி,  போரைத் தொடர்ந்து, நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சகோதர யுத்தத்தினால் ஏற்பட்ட  சரிவைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாகை சூடினர்.

வீழ்ந்தது தமிழின எழுச்சி ஈழத் தமிழகத்தில்! எந்த ஒரு இனத்தின் எழுச்சியும் வீழ்வதும்  தாழ்வதும்; பின்னர் வெற்றிச் சிகரம் ஏறுவதும் உலக வரலாற்றில் காணக்கூடிய ஒப்பற்ற  உதாரணங்கள். ஒற்றுமை இல்லாத காரணத்தாலும் ஒருவரை ஒருவர் தீர்த்துக் கட்டும்  காரணத்தாலும் தொடர்ந்து வீழ்ந்துபட்டு வருகின்ற இனமாக தமிழ் இனம் இருந்தாலுங்  கூட அந்த இனத்திற்கு தமிழ் ஈழத்தில் தற்காலிகமாக ஏற்பட்டிருப்பது; நிரந்தரமானதல்ல  என்பதையும்; அது நிரந்தரமாக இருந்துவிடக் கூடாது என்பதையும் - அசையாத  நம்பிக்கையுடன் மனத்தில் கொண்டு களத்தில் மறைந்த மாவீரர்கள் அனைவருக்கும் இறுதி  வணக்கத்தைத் தெரிவித்து - இனியும் தமிழ் இனம் தலை நிமிர்ந்தே வாழ்வதற்கு- நமது  உடல், பொருள், ஆவி அனைத்தையும் தருவதற்கு தயங்க மாட்டோம் என்ற  உறுதியுடன்; காந்தி காட்டிய வழியில்; அண்ணா வகுத்த நெறியில்; தன்மான  உணர்வைத் தட்டியெழுப்பிய பெரியார் போதித்த பாதையில்; ஈழத் தந்தை செல்வா  ஊட்டிய உணர்வில்; அறப்போர் தொடர்ந்திட அணி வகுப்போம்!” என்று கூறியுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/7745.html

No comments:

Post a Comment