Tuesday 28 August 2018

நான் புதிதாய் பிறக்கிறேன்: திமுக தலைவராக தளபதி ஸ்டாலின் அவர்களின் முதல் உரை

நான் புதிதாய் பிறக்கிறேன்: திமுக தலைவராக தளபதி ஸ்டாலின் அவர்களின் முதல் உரை

என் உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன் பிறப்புகளே..

உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு பேருண்மையைச் சொல்லி உரையைத் தொடங்குகிறேன். நான் தலைவர் கலைஞர் இல்லை. அவர் போல் பேசத்தெரியாது. பேசவும் முடியாது. அவரைப்போல் மொழியை ஆளத்தெரியாது. ஆனால் எதையும் முயன்று பார்க்கும் துணிவைக் கொண்டவனாக உங்கள் முன் நிற்கிறேன். இது பெரியார் அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக் கூடிய விதை. இன்று நம் மத்தியில் தலைவர் இல்லாவிட்டாலும். தலைவருடைய கொள்கை தீபம் இருக்கிறது. தலைவரின் கொள்கை தீபம் நம் கையில் இருப்பது முப்படையும் நம் கையில் இருப்பதற்கு சமம். அந்த முப்படை நம்மிடத்தில் இருக்கிறது என்ற தைரியத்தில் துணிச்சலில் இந்த தலைவர் பொறுப்பை உங்கள் அன்போடு ஆதரவோடு நான் ஏற்றுக் கொள்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று நான் வாழ்ந்ததாக தலைவர் கலைஞர் என்னைபாராட்டியிருக்கிறார். உழைப்பு உழைப்பு உழைப்பு என்று எனது பெயருக்கு விளக்கம் சொல்லி உச்சி முகர்ந்தார் தலைவர் கலைஞர். அந்த வார்த்தைக்கு உதாரணமானவாக என் வாழ்க்கை முழுவதும் உழைப்பு உழைப்பு உழைப்பு என்றுதான் வாழ்வேன்.

என்னைவிட கழகம் பெரிது என்றார் கலைஞர். அவர் வழியில் நானும் சொல்கிறேன் என்னைவிட கழகம் பெரிது. திமுகதான் எந்த தனிமனிதனையும்விட பெரியது. உதயசூரியன் சின்னம்தான் எந்த பெரிய மனிதனைவிடவும் பெரியது.  இந்த மேடையில் எனக்கு ஒரே ஒரு குறைதான்.

இந்த காட்சியைப் பார்க்க தலைவர் கலைஞர் இல்லையே என்ற குறைதான். ஆனால், கலைஞரிடத்தில் பேராசியர் இருக்கிறார். வாழும் திராவிட தூணாக பேராசிரியர் அன்பழகன் இருக்கிறார்.

எனக்கு அக்கா உண்டு அண்ணன் இல்லை..என்று கலைஞர் குறிப்பிட்டிருக்கிறார். ஆதலால், பேராசிரியர் அப்பாவுக்கு அண்ணன். எனவே, பேராசிரியர்தான் எனக்கு பெரியப்பா. அப்பாவுக்கு முன்னரே என்னை தலைவராக முன்மொழிந்தவர் பெரியப்பா. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 100 மடங்கு சிரமம். பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது 200 மடங்கு சிரமம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அடுத்த தலைவராவதற்கு ஸ்டாலின் தான் தகுதியானவர் என்று கூறியவர் பெரியப்பா.

அந்த பேராசிரியருக்கு முன்னால் நின்று தலைவராக தேர்வு பெற்றதை நான் பெருமையாகக் கருத்துகிறேன். அரங்கத்தில் இருப்பவர்கள் முகத்தைப் பார்த்தேன்.

என்னை பள்ளி சிறுவன், கல்லூரி மாணவனாக, கழக பேச்சாளராக, இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக பொருளாளராக, செயல்தலைவராக எனது வளர்ச்சியை படிப்படியாகப் பார்த்தவர்கள் இங்கே இருக்கிறீர்கள். படிப்படியாக வளர வேண்டும் என்றுதான் கலைஞர் விரும்பினார். நானும் படிப்படியாக முன்னேறவே விரும்பினேன். தலைவர் கலைஞரின் மகன் என்பதைவிட தலைவரின் தொண்டன் என்பதிலேயே மகிழ்ச்சி.
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், எனும் 4 தூண்களால் எழுப்பிய கோட்டை நமது திராவிட முன்னேற்ற கழகம். சுயமரியாதை இல்லாத மாநில அரசு. சமத்துவத்தையும் சமூகநீதியையும் பகுத்தறிவையும் சிதைக்கக்கூடிய மத்திய அரசையும் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. மாநில மக்களின் நலனை காவு கொடுத்து அரசு என்ற பெயரால் பகல் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தை திருடர்கள் கையில் இருந்து விடுவிப்பதுதான் நம்முடைய முதல் கடமையாக இருக்க வேண்டும். நாட்டின் மாபெரும் ஆபத்து எதுவென்றால் கொள்கைகளே இல்லாமல் இயங்கக்கூடிய அரசியல் கட்சிகள். தமிழக ஆட்சியர்களை பார்க்கும்போது நெஞ்சு பொருக்குதில்லையே என்ற பாரதியின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது.

வெளியில் இருந்து எதிர்கொள்ளும் சவால்களுக்கு இடையே, நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் என்ன? இந்த கேள்விகள் சில நாட்களாக என்னைத் தூங்கவிடவில்லை.

விழித்துக் கொண்டே ஒரு கனவு கண்டேன். ஒரு அழகான எதிர்காலத்தை நான் கனவு கண்டேன்! இந்த நாளில் அந்தக் கனவின் சில துளிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாம், நம் கழகம், நம் தமிழினம், நம் நாடு, நம் உலகம் இவை அனைத்தும் புத்தம் புதிதாய் பேரழகாய் மகிழ்ச்சியில் வாழும் கனவு அது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத விலங்கோ இனமோ இந்த மண்ணில் நீடித்து நிற்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும் கேட்கும் மு.க.ஸ்டாலினாகிய நான் புதிதாய் பிறக்கிறேன். இது வேறு ஒரு நான். திமுகவின் மரபணுக்களோடு; நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடு.. இதோ உங்கள் முன் பிறந்திருக்கிறேன். நான் மட்டுமா!? என்னோடு பிறந்திருக்கக்கூடிய இந்த கோடிக்கணக்கான உடன்பிறப்புகளுக்கு எனது வாழ்த்துகள். இது புதிய நாம்.  அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தினர்.

யார் அந்த கழகத்தினர். தன் சாதியே உயர்ந்தது என நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த அனைவரையும் தன் உடன்பிறப்பாக நினைப்பவர்கள் தான் அந்த கழகத்தினர். எளியோருக்கு கரம் கொடுப்பவர்கள். கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல. தான் நம்பவில்லை எனினும் என்றாலும் பிறர் நம்பிக்கைகளுக்கு மரியாதை கொடுப்போர். யார் தவறு செய்தாலும், நானே செய்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள்.

அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கை என்ன? அந்த அழகான எதிர்காலத்தில் நம் கழகத்தின் கொள்கைகள் என்ன? பகுத்தறிவு மூலம் உலகைக் காணுவோம் என உரக்கச் சொல்லுதல். ஆணும் பெண்ணும் இங்கு சமம் என மதித்தல். திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் சம உரிமைகளைப் பெற்றுத் தருதல். தனி மனித மற்று ஊடக கருத்து சுதந்திரத்தை மீட்டெடுத்தல். கருத்து சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாத்தல். பிற மொழிகளை அழித்து இந்தியா முழுவதற்கும் மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எடுத்தல். இவையெல்லாம் எனது நீண்ட கனவின் சில துகள்கள். இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை.

கனவு இன்றுமுதல்  மெய்ப்படப்போகிறது. இதை மெய்ப்பிக்க துடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த பெருங்கனவை நான் தனியாக மெய்ப்பிக்கமுடியாது. என் உயிரினும் மேலான என் கலைஞரின் உடன்பிறப்புகள் இல்லாமல் இதை மெய்ப்பிக்க முடியாது. இது என் கனவு மட்டுமல்ல.  நம் கனவு. இது கழகத்தின் கனவு. தமிழகத்தின் கனவு அதுதான்.

வா என்னோடு கைகோர்க்க வா..

ஒன்றாக முன்னேற மட்டுமல்ல.. தேவைப்பட்டால் சில அடிகள் பின்னே வைக்கக் கூட

சில அடிகள் பின்னே வைப்பதும் முன்னேற்றமே!

இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா..

முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எறிய வா..

நான் முன்னே செல்கிறேன்.. நீ பின்னே வா என அழைக்கவில்லை..

நாம் சேர்ந்தே செல்வோம் வா.. என்று அழைக்கிறேன்

இந்தக் கூட்டத்தில் உள்ள என் அண்ணன்கள் அக்காள்கள் இளையோர் அனைவரும் தம்பிகள் தங்கைகள்

இதுதான் நம்முடைய குடும்பம்; இதுதான் என்னுடைய குடும்பம்

நானும் ஒரு தொண்டன். இங்கு அனைவரும் சமம்.

யார் பெரியவர்கள் என்ற போட்டியில் சுயநலத்தில் கட்சியின் எதிர்காலம் பற்றி கவலைப்படாதவர்களாக யாரும் மாறிவிடக்கூடாது. தலைமைக்கு கட்டுப்பட்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக தலைமை நிச்சயம் இயங்கும்.

1 comment:

  1. Excellent work I have such a great editor friend in my twitter Account thank you so much...

    ReplyDelete