Tuesday 27 June 2017

2G பித்தலாட்ட கதை உருவான வரலாறு

2ஜி: ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்ட அறிக்கை என்னுடையதல்ல; கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கற்பனை என்ற விவரம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே வினோத் ராயின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி கிடைத்திருக்கும் என்றார் வினோத் ராய். ஆனால், சமீபத்தில் இதை ஏலம் விட்டபோது வாங்கக் கூட ஆள் இல்லாமல் வெறும் ரூ. 9,407 கோடிக்கே அது விற்பனையானது. இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பாக வினோத் ராய் கூறிய 'மனக் கணக்கு' எந்த அளவுக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டது.
இந் நிலையில் வினோத் ராய் மற்றும் அவரது துணை அதிகாரியான ரேகா குப்தாவின் அடுத்த தகிடுதித்தம் வெளியே வந்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து உண்மையிலேயே ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டியது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் தான். இவர் தான் தொலைத் தொடர்பு மற்றும் தபால் துறைக்கான சிஏஜியின் தணிக்கை அதிகாரி ஆவார்.

ஆனால், வினோத் ராய் அண்ட் கோ ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தாங்களே ஒரு அறிக்கையை தயார் செய்து அதில் ஆர்.பி.சிங்கிடம் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளது. இந்த நஷ்டக் கணக்கு சரியானதல்ல என்று ஆர்.பி.சிங் கூறியும் கூட அவரது உயர் அதிகாரியான வினோத் ராய் அதில் கையெழுத்து போட வைத்துள்ளார். இதை ஆர்.பி. சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.
முரளி மனோகர் ஜோஷி...:
2ஜி விவகாரம் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு 2008ம் ஆண்டு முதலே விசாரித்து வந்தது. இந் நிலையில் இதன் தலைவராக பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி 2010ம் ஆண்டு பதவியேற்றார்.
அதே நேரத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகமான சிஏஜியின் அலுவலகமும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து ஆய்வு செய்து வந்தது. அப்போது, சிஏஜி அலுவலகத்தை முரளி மனோகர் ஜோஷி பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, சிஏஜி தயாரித்து வந்த ரகசிய 2ஜி அறிக்கை குறித்து விவாதித்துள்ளார். இதை சிஏஜி அலுவலகத்தின் தலைமையக டைரக்டர் ஜெனரல் ஆர்.பி.சின்ஹா தனது அலுவலகக் குறிப்புகளில் எழுதியுள்ளார்.
இதன் பின்னர் தான் சிஏஜியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அதில், ஸ்பெக்ட்ரம் விற்பனையால் மத்திய அரசுக்கு ரூ. 57,666 கோடி முதல் ரூ. 1.76 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது.
சிஏஜி ஒரு விஷயத்தை ஆய்வு செய்து வந்தபோது முரளி மனோகர் ஜோஷி ஏன் அந்த விவரங்களைப் பெறவும், அது குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கவும் ஆர்வம் காட்டினார் என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கே போய் உதவிய சிஏஜி அதிகாரிகள்:
மேலும் முரளி மனோகர் ஜோஷி இந்த விவகாரத்தில் அறிக்கை தயாரிக்க உதவுவதற்காக சிஏஜி அலுவலக அதிகாரிகள் அவரது வீட்டுக்கே நேரில் சென்று, அதுவும் விடுமுறை நாட்களில், உதவி செய்துள்ள விவரத்தையும் ஆர்.பி.சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற ஆர்.பி.சிங் 2ஜி விவகாரத்தில் சிஏஜி வினோத் ராயின் செயல்பாடுகள் குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ள பேட்டியில்,

கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி, குட் பிரைடே விடுமுறை தினத்தில், சிஏஜி அலுவலக அதிகாரிகள் முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்குச் சென்றனர். பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் குற்றம் சாட்டி ஜோஷி தயாரித்த 2ஜி அறிக்கையை தயாரிக்க உதவினர்.
ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அலுவலக அறிக்கை என்னுடையதே அல்ல. தனக்கு இப்படித்தான் (ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் நஷ்டம் என்று கூறி) அறிக்கை வேண்டும் என்று எனது அதிகாரியான சிஏஜி (வினோத் ராய்) எழுத்துப்பூர்வமாகவே உத்தரவு போட்டுவிட்டால் நான் என்ன செய்ய முடியும்?.
நான் செய்த கணக்குத் தணிக்கையின்படி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் எந்த நஷ்டமும் இல்லை என்றே எழுதியிருந்தேன். அதே நேரத்தில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் வைத்திருக்கும் நிறுவனங்களிடம் இருந்து இன்னும் ரூ. 37,000 கோடியை வசூலிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தான் எழுதியிருந்தேன். இதைக் கூட நஷ்டமாகக் கூற முடியாது. காரணத்தைச் சொல்லி, அதை நிச்சயம் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியும்.
இது நடந்தது 2010ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி. இதையடுத்து எனது தலைமையிலான குழுவை சிஏஜி தலைமையகத்தில் உள்ள துணை சிஏஜியான ரேகா குப்தாவின் கீழ் இணைத்துவிட்டனர். மேலும் மத்திய நிதித்துறையின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யும் பணியையும் என்னிடம் தரவில்லை.
2010ம் ஆண்டு ஜூலை மாதம் நான் கொடுத்த அறிக்கையை முழுவதுமாகவே திருத்தி (ரூ. 1.76 லட்சம் கோடி வரை நஷ்டம் என்று எழுதி) அதை மத்திய நிதித்துறைக்கும், தொலைத் தொடர்புத்துறைக்கும் அனுப்புமாறு உத்தரவு போட்டனர். இந்த உத்தரவு மேலதிகாரிகளிடம் இருந்து வந்ததால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.
மேலும் எந்தவித ஆடிட் வழிகாட்டுதல்களும் இல்லாமல் இந்த அறிக்கையை தயார் செய்திருந்தனர். எதை வைத்து இந்த நஷ்டக் கணக்குக்கு வந்தீர்கள், அந்த வழிகாட்டு விதிமுறைகள் என்ன என்று கேட்டு ரேகா குப்தாவுக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பதிலே வரவில்லை.
அதே போல இந்த நஷ்டக் கணக்கை நான் ஏற்கவில்லை என்பதையும், சரியான வழிகாட்டுதல்கள்- ஆவணங்கள் இல்லாமல் இந்த ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் காட்டுப்படுவதையும் எதிர்த்து வினோத் ராய்க்கும் ரேகா குப்தாவுக்கும் அலுவலகரீதியாக பலமுறை எனது எதிர்ப்பைக் காட்டினேன்.
ஸ்பெக்ட்ரத்துக்கு இது தான் விலை என்று டிராய் அமைப்போ, மத்திய அரசோ எந்த கட்டணத்தையும் நிர்ணயித்திருக்கவில்லை. இதனால் எதை வைத்து ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று சொல்ல முடியும். நம்மிடம் இதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே என்று சுட்டிக் காட்டினேன். ஆனால், சிஏஜி தலைமையகம் (வினோத் ராய்) சொன்னதை வைத்து இது தான் நஷ்டம் (ரூ. 1.76 லட்சம் கோடி) என்று எழுதி அனுப்ப வேண்டிய நிலைக்கு எனது அலுவலகம் தள்ளப்பட்டது.
முன்னதாக ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் என்று எழுதி அவர்கள் அனுப்பிய ரிப்போர்ட்டில் நஷ்டக் கணக்கை நீக்கினேன். ஆனால், மீண்டும் அதையே சேர்த்து எழுதி திருப்பி அனுப்பி வைத்து கையெழுத்து போட வைத்தனர். எதை வைத்து இந்தத் தொகையை சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு யூகம் தான் என்று பதில் தந்தனர். ஆடிட்டிங்கில் யூகங்களுக்கு எப்படி இடம் தர முடியும் என்று கேட்டதற்கு பதிலே வரவில்லை.

மேலும் 2ஜி விவகாரத்தில் சிஏஜி அலுவலகத்தில் இருந்து பல தகவல்கள் வெளியே கசிந்தபடியே இருந்தன. அதை யார் லீக் செய்தது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் கூட சிஏஜி அலுவலக அதிகாரிகளுடன் முரளி மனோகர் ஜோஷி தொலைபேசியில் விவாதித்தார்.
இவ்வாறு போட்டு உடைத்துள்ளார் ஆர்.பி.சிங்.
நஷ்டம் குறித்து வினோத் ராய் கூறிய தகவல்களை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் ஏற்கனவே பலமுறை ஆஜராகி ஆர்.பி.சிங் மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இப்போது தான் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் தலையீடுகளையும் வினோத் ராயின் 'வேலைகளையும்' வெளியே விளக்கமாகப் பேசியுள்ளார் சிங்.
Oneindia


5 comments:

  1. அயோக்கிய பயல்கள்

    ReplyDelete
  2. அயோக்கிய பயலுங்கா வினோத் ராய் நாய்

    ReplyDelete
  3. ஆடிட் என்பதே வழக்கமாக ஆடிட்டிங் பார்ட்டி தனக்கு தெரிந்த வகையில் ஒரு கணக்கை எழுதி பிறகு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய வகையில் ஆதாரங்கள் காண்பித்து ஆடிட் பாராவை சரி செய்வார்கள். அதற்கு பிறகு தான் தவறுகள் இருப்பின் வழக்கு , விசாரணை, விளக்கம் எல்லாம் நடக்கும். ஆனால் ப.சிதம்பரம் அவர்கள் எப்படி நேரடியாக வழக்கு தொடர அனுமதி தந்தார். திமுகவை அழிக்க நினைத்து பாஜக வை வளர்த்து சொந்த கட்சியை நட்டாற்றில் விட்டார். இதோ இன்று பாஜக பெகாசஸ் சாப்ட்வேர் வாங்கியதா இல்லையா என்பதை நீதிமன்றம் பல முறை கேட்டும் பதிலளிக்காமல் எப்படி காலம் தள்ளுகிறது. நீதிமான் என்று சிவகங்கை காரர்கள் செய்தது தான் இன்று இந்த அவல நிலை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை... ப. சிதம்பரமே காங்கிரஸ்க்கு குழி தோண்டியுள்ளார்
      👍🙏

      Delete
  4. இந்த நாட்டை நாசமாக்கிய நாய்களில் முதன்மை நாய் நச்சுப்பாம்பு பாஜகவின் முரளி மனோகர் ஜோஷி என்னும் சொறிநாய்

    ReplyDelete