Wednesday 28 June 2017

கலைஞர் காமராஜரை திட்டினார் என்பவர்கள் அவர் காமராஜரை போற்றியதை சொல்ல மறந்ததேன்?

கலைஞர் அன்றைய எதிர்கட்சித் தலைவராக இருந்த காமராஜரை திட்டியதாக சொல்பவர்கள் கலைஞர் அவரை எப்படி வாழ்த்தினார் என்பதையும் எப்படி மதித்தார்என்பதையும் ஏன் சொல்ல மறந்தனர்?

1) காமராஜரையும்,  காங்கிரசையும் கடுமையாகத் தாக்கிய ஈ.வே.ரா.,"பச்சைத்தமிழன்' என காமராஜரைப்  பாராட்டினார். காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் துவக்க காலத்தில்  கடுமையாக விமர்சனம் செய்த கருணாநிதி ,அண்ணா ,எம்ஜிஆர்  போன்றோர் தனிப்பட்ட முறையில் காமராஜர் மீது மரியாதையையும் அன்பும் செலுத்தினர்.

2) காமராஜரின் பிறந்த தினத்தை, "கல்வி வளர்ச்சி தினமாக'  கடைபிடிக்கப்படுகிறது.
கலைஞர் #கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில்தான் காமராஜர் பிறந்த தினத்தை  கல்வி வளர்ச்சி தினமாக அறிவித்து பள்ளிகள் தோறும் கொண்டாட  வைத்தார்.

3) முதன் முதலாக தமிழகத்திலே காமராஜர் அவர்களுக்கு சிலை அமைத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பிலே இருந்த சென்னை மாநகராட்சியைச் சேர்ந்ததாகும்.

4) காவேரிப் பிரச்சினை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் காமராஜர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை கலைஞர் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்துகொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறார்.

5) பேரறிஞர் அண்ணா அவர்கள்தமிழகத்தின் முதல்வராக இருந்து நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவர் காமராஜர் அவர்கள்தான்.

6) தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் பிரதமர் வாஜ்பய் அவர்களிடம் வலியுறுத்தி, வாதாடிப் பெற்று குமரிக் கடற்கரையில், காமராஜருக்கு, ஏற்றமிகு மணி மண்டபம் ஒன்றை #கலைஞர் எழுப்பியதை எவர்தான் மறந்திட இயலும்?

7) சென்னை கடற்கரை சாலை, கழக ஆட்சியில் காமராஜர் சாலை ஆயிற்று. மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையம் காமராஜர் பெயர் தாங்கி நிற்பதற்கு காரணம் #கலைஞர்தான்

8) விருதுநகரில் காமராஜர் பிறந்த இல்லத்தை நினைவகம் ஆக்கியது, சென்னையில் அவர் உடலை அடக்கம் செய்ய கிண்டியில், அண்ணல் காந்தி அடிகளின் பெயரால் உள்ள மண்டபத்திற்குப் பக்கத்திலேயே இடம் தேடி அங்கே எழிலார் நினைவகம் அமைத்தது போன்றவை கர்ம வீரர் காமராஜர் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் ஆற்றிய தொண்டுக்கு #கலைஞர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட எளிய காணிக்கைகளாகும்.

9) தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்திற்கு காமராஜரின் தாயார் பெயர் நினைவில் நிலைத்திருக்கும் வகையில் “அன்னை சிவகாமி அம்மையார் வளாகம்” என்று பெயர் சூட்டியதும், அரசின் “பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட”திற்கு சிவகாமி அம்மையார் பெயரைச் சூட்டி அதை நடைமுறைப்படுத்தியதும், காமராஜரின் ஊழியராகப் பணியாற்றிய வைரவன் என்பவரை சென்னை காமராஜர் நினைவகத்தில் வழிகாட்டியாக அரசு ஊதியத்தில் அமர்த்தியதும், அவர் குடியிருக்க அரசு குடியிருப்பில் வீடு வழங்கியதும் #கலைஞர்தான்.
காமராஜர் பிறந்த நாளையொட்டி 15-7-1976இல் கலைஞர் எழுதிய ஒரு கவிதை :-

“பெருந்தலைவ;
இன்றைக்கு உன்றன் பிறந்தநாள் –
கொள்கைக் குன்றுக்கு எங்கணும் திருவிழா!
விருதையில் பிறந்து வீரனாய் வளர்ந்தாய்
சரிதையில் நிறைந்த தலைவனாய் நின்றாய்!
சிறையின் கொடுமையும் சித்ரவதையும்
சிரித்த முகத்துடன் ஏற்ற தியாகி
ஆயிரம் உண்டு கருத்து மோதல் – எனினும்
அழியாத் தொண்டு மறந்திடப்போமோ?

தமிழ்நிலம் மணக்க வந்த திருவே!
அமிழ்தெனும் பொதுப்பணியின் உருவே!
கருத்திருக்கும் உன்றன் உடல் என்றாலும் – நெஞ்சில்
கருத்திருக்கும் காலமெல்லாம் உழைப்பதற்கு!
கதராடை மேனிதனை அலங்கரிக்கும் –
கதறுகின்ற ஏழைகளைக் கரம் அணைக்கும்.

கட்சிகளை நோக்கி, நீ கடுமொழிகள் தொடுத்திடுவாய் – பிற
கட்சித் தலைவர்க்கோர் இன்னலென்றால் துடித்திடுவாய்!
பெரியாரின் கல்லறையில் உன் கண்ணீர்!
பேரறிஞர், மூதறிஞர் மறைந்த போதும் உன் கண்ணீர்!
பெற்ற தாய்தனை நான் இழந்தபோதும்
உற்றார் உறவுபோல் நீ வந்து உகுத்தாய் கண்ணீர்!
பெருமகனே! உனக்காக எம் கண்ணீர்
பேராற்றுப் பெருக்கெனவே பாய்ந்த தன்றோ?

தனி மனிதன் வாழ்வல்ல உன் வாழ்வு
தன்மானச் சரித்திரத்தின் அத்தியாயம்
குமரிமுதல் இமயம்வரை உன்கொடி பறக்கக்
கோலமிகு தமிழகத்தின் புகழ் பொறித்தாய்.
“குணாளா! குலக்கொழுந்தே!”” என்று பண்பின்
மணாளர் எங்கள் அண்ணன் உனை அழைத்தார்.
பச்சைத் தமிழன் எனப் பகுத்தறிவுத் தந்தை
இச்சையுடன் உன் உச்சி முகர்ந்தார்.
கருப்புக் காந்தியென உன்னை – இந்தக்
கடல்சூழ் நாடு கைகூப்பித் தொழுததன்றோ!

வாழ்க்கையின் ஓரத்தில் நீ எம்மிடம் வாஞ்சையும் காட்டினாய்! உன்
வாழ்வையே ஒரு பாடமாய் அனைவர்க்கும் நிலை நாட்டினாய்!
இன்றைக்கு உன்றன் பிறந்த நாள் –
என்றைக்கும் அது சிறந்த நாள்!

By. Antony Parimalam



1 comment:

  1. இணையத்தளத்தில் திமுக என்று type செய்தால் தவறான கருத்துகள் மட்டுமே இருக்கும் நிலையில் என்னை போன்ற இளைய சமுதாயத்திற்கு திமுகவின் மேல பற்றும் மரியாதையும் ஏற்படுத்தும் வகையில் உங்கள் பதிவுகள் நன்றி சார்

    இந்த பக்கத்தை 1 வீக் அப்புறம் தான் கண்டுபிடிச்சேன் கொஞ்சம் குறிப்புகள் எடுத்து கொண்டேன் மற்றவர்களுக்கு புரிய வைக்க நன்றி அண்ணா

    ReplyDelete